குழந்தை வரம் தரும் நந்திதேவர் அவதரித்த ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோவில்
சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி,”தந்தையே! கலங்காதீர்கள். நான் சிவனைக்குறித்துக் கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்” என்றார்.
தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னைக் காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார். நந்தி தவம் செய்த “நந்தியால்” என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் தவமிருந்தான். பர்வத ன்கடும் தவம் செய்து சிவபெருமான் பாதம் எப்போதும் தன் மீது இருக்க வேண்டும் என்ற வரம் பெற்றான்.
ஆதன்படிப் பர்வதனை ஒரு மலையாக ஆக்கி ஸ்ரீ பர்வதம் என்னும் பெயரிட்டு தாம் சிவலிங்கமாக அம்மலையின் மீது அமர்ந்து எழுந்தருளினார். ஆந்த ஸ்ரீ பர்வதமே நாளடைவில் ஸ்ரீசைலம் என வழங்கலாயிற்று. சைலம் என்றால் மலை எனப் பொருள்படும்.
மற்றும் ஒரு சிவபக்தை நகஸ்ரீ என்பவள் தவமிருந்து இத்தலம் தனது பெயரால் வழங்கப்பட வேண்டுமென சிவபெருமானிடம் வரம் பெற்றாள். நகஸ்ரீ என்பது ஸ்ரீ நகம் என மாறி தற்போது ஸ்ரீசைலம் என மருவி வழங்குகிறது. சிலாதமுனிவர் தவம் செய்தமையால் இம்மலை சிலாத முனி மலை எனப்பெயர் பெற்று நாளடைவில் ஸ்ரீ சைலம் எனப் பெயர் மருவிவிட்டது எனவும் கூறப்படுகிறது.
மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா இங்கு கிடைத்த மல்லிகைப்பூவாலும், அர்ஜுனா மலர்களாலும் இறைவனைப் பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் “மல்லிகார்ஜுனர்” எனப்படுகிறார். பிரதோஷத்தன்று நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பதில் சந்தேகமில்லை. அவரது அவதாரத் தலமான ஸ்ரீசைலம் மனதிற்கு இதம் தரும் மலைப்பகுதியில் உள்ளது.
ஆந்திராவிலுள்ள ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. இங்குள்ள மல்லிகார்ஜுனருக்கு நாமே அபிஷேக ஆராதனை செய்யலாம். சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்றால், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது. அத்துடன் அம்மனின் 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
Leave a Comment