ஒன்பது நரசிம்மர்களைக் கொண்ட தஷிண அகோபிலம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் சுமார் 25 கிமீ தொலைவில் இருக்கிறது ஆவணியாபுரம். இங்கு சிறு குன்றின் மேல், நவ நரசிம்மர் ஆலயம் குடைவரைக் கோயிலாகக் காணப்படுகிறது.
சிங்க முகத்துடன் நாராயணன் அருள்பாலிப்பதால் ஆவணிநாராயணபுரம் என்பதே இவ்வூரின் திருப்பெயர். திருவண்ணாமலை மாவட்டத்தின் மையமாக பாய்ந்தோடும் செய்யாற்றின் கரையோரம் அமைந்திருக்கிறது இந்த ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். திருப்பதியில் வெங்கடாஜலபதி, திருவரங்கத்தில் அரங்கநாதர், காஞ்சிபுரத்தில் வரதராஜபெருமாள், சோளிங்கரில் யோக நரசிம்மர், ஆவணியாபுரத்தில் லட்சுமி நரசிம்மர் ஆகியோர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இந்த நகரங்கள் பஞ்ச திருப்பதிகள் என பக்தர்களால் போற்றப்படுகிறது. பஞ்ச திருப்பதிக்கும் நேரில் சென்று சேவித்த பேரின்பத்தை, ஆன்ம நிறைவை, அகத்தின் மகிழ்வை ஓரிடத்தில் ஒருங்கே பெற முடியும் என்றால் விந்தையாக தான் இருக்கும்.
அறுபது வருடங்களுக்கு ஒரு முறை, சர்வதாரி வருஷத்தில், தாயாருக்கு சிங்க முகம் அணிவித்து உற்சவம் நடக்கிறது. இதற்கு ஒரு கதை சொல்கிறார்கள். பிரம்மா நாராயணனைக் குறித்து யாகம் செய்தபோது, யாகத் தீயிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்டாராம். அப்போது அவர் முகமற்று இருந்ததைக் கண்ட தாயார் மஹாலஷ்மி, முகமில்லாது பக்தர்களுக்கு எவ்வாறு தரிசனம் அளிப்பது என்று கேட்டு நரசிம்மரின் சிங்க முகத்தை தமக்கு அளிக்குமாறு வேண்ட, அவ்வாறே சிங்க முகம் பெற்றதாகச் சொல்கிறார்கள். அவ்வாறே அறுபது வருடங்களுக்கு ஒரு முறை ஆனி மாதம் ஒன்பதாம் நாள் தாயாருக்கு சிங்க முகம் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது.
ஆவணியாபுரத்து மலை உச்சியில் ஸ்ரீரங்கநாதரும், ஸ்ரீவெங்கடாஜலபதியும், ஸ்ரீவரதராஜபெருமாளும், யோக நரசிம்மரும் எழுந்தருளியுள்ளனர். கீழ்மலையில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். பஞ்ச திருப்பதியின் நாயகர்களும் ஓரிடத்தில் எழுந்தருளிய புண்ணிய பூமியாக, ஆவணியாபுரம் திகழ்கிறது. ஆவணியாபுரத்து மலைமீது அமைந்துள்ள கோயில் கருவறையில் அமர்ந்த நிலையில் எழுந்தருளும் நரசிம்மருக்கு மட்டுமல்ல, அவரது இடபாகம் எழுந்தருளி திருமுகம் காட்டும் தாயாருக்கும் சிம்மமுகம். உற்சவரும் நின்றதொரு திருக்கோலத்தில் சிம்ம முகம். சன்னதியின் எதிரில் எழுந்தருளும் கருடாழ்வாருக்கும் சிம்ம முகம். இச்சிறப்பு வேறு எங்கும் காணக்கிடைக்காத பெரும் பேறு. இத்திருதலத்துக்கு மேலும் பல சிறப்புண்டு. நவ நரசிம்மரை சேவித்த பலனை இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெறுகின்றனர். லட்சுமி நரசிம்மர் கருவறையில் மூன்று நரசிம்மரும், தாயார் சன்னதி அருகே பஞ்ச நரசிம்மரும், மலை உச்சியில் உள்ள சன்னதியில் யோக நரசிம்மருமாக 9 நரசிம்மர் இக்கோயிலில் எழுந்தருளி காட்சியளிக்கின்றனர்.
இரண்டு அடுக்காக திருக்கோயில்கள் அமைந்துள்ளன. முதலில் சுமார் எழுபது படி ஏறியதும், யோக நரசிம்மர் தரிசனம் பெறலாம். பின்னர், மேலும் நூறு படிகள் கடந்தால், ஸ்ரீனிவாச பெருமாளை நின்ற திருக்கோலத்தில் தரிசிக்கலாம். தாயாரின் திவ்யநாமம் அலர்மேல் மங்கை என்பதாகும். தாயாரை மலையடிவாரத்தில் சேவிக்கலாம். இவற்றைத் தவிர, பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் சந்நதியும் அமைந்துள்ளது.
தாயாருக்கும், கருடாழ்வாருக்கும் சிங்க முகம் தரித்துச் சேவை செய்வது இந்த ஒரு கோயிலில்தான் என்று கூறுகிறார்கள். இக்கோயிலில் வழிபடுவது பல நன்மைகளைப் பயக்கும் என்பது நம்பிக்கை. திருமண பிராப்தி, புத்திர பாக்கியம், கடன் தொல்லையிலிருந்து விடுபடுதல் போன்ற பலவற்றிற்கும் இங்கு வந்து நரசிம்மருக்கும், கருடாழ்வாருக்கும் நிவேதனம் செய்து வழிபடுதல் வழக்கமாக உள்ளது. இதற்கான சடங்குகளை கோயில் அர்ச்சகர்களிடமிருந்து அறியலாம். ஒன்பது நரசிம்மர்களைக் கொண்ட தஷிண அகோபிலம் என்றும் இது அறியப்படுகிறது.
ஓம் நமோ நாராயணா!
Leave a Comment