மகரஜோதியாக தரிசனம் தரும் ஹரிஹரன்.... 


பாற்கடலில் அமுதம் கடைந்து அதைத் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது, சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலவில்லை. 

பின்னர் தியானம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார். அதனால் சிவபெருமானுக்காக விஷ்ணு மோகினியாக மீண்டும் அவதரித்த பொழுது சிவனுக்கும், மோகினிக்கும் பிறந்தவரே ஐயப்பன். இதன் காரணமாகவே ஐயப்பனுக்கு ஹரி (விஷ்ணு) - ஹரன் (சிவன்) என்ற பெயரும் உண்டு. குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டுச் சென்று விட்டனர். அந்தச் சமயத்தில் வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் மரத்தடியில் தேஜசுடன் இருந்த குழந்தையை கண்டார். அந்தக் குழந்தையை அரண்மனைக்குக் கொண்டு சென்றார். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தனர். 


பிறகு மணிகண்டனை குருகுலத்தில் சேர்க்க பந்தள மன்னன் முடிவு செய்தார். தெய்வக்குழந்தையான ஐயப்பன் குறுகிய காலத்திலேயே நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், 64 கலைகள் ஆகிய அனைத்தையும் கற்று தேர்ந்தார். பிறவியிலேயே ஊமையாக குருகுலத்தில் இருந்த குருவின் மகனான கண்ணனை மணிகண்டன் பேசவைத்தார். மணிகண்டனின் அபூர்வ சக்திகளையும், செயல்களையும் கண்ட குரு அவரை தாங்கள் யார் என்பதனை அறிய விரும்புவதாகக் கூறினார். குருவுக்கு உண்மையை மறைக்க விரும்பாத மணிகண்டன் தான் யார் என்பதைக் கூறி அதனை இரகசியமாக வைத்திருக்க வேண்டினார். அத்துடன் குருதட்சிணையாக ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தில் ஜோதி சொரூபனாக காட்சி தருவதாக கூறினார்.

இதனால் தான் ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார். எப்போதும் தவக்கோலத்தில் அருளும் ஐயப்பன், ஆண்டுதோறும் மகர சங்கராந்தி நாளில் மட்டும் திருவாபரணம் அணிந்து முழு அலங்காரத்துடன் அருள்பாலிப்பார். அன்றைய தினம் சந்நிதானத்திற்கு எதிரில் உள்ள ஐயப்பனின் ஐந்தாவது மலையான காந்த மலையில் ஜோதி சொரூபமாக ஐயப்பன் காட்சிதருவார்.



Leave a Comment