அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவது ஏன்? 


குஞ்சரன் என்னும் சிவ பக்தனின் மகளாகிய அஞ்சனை எனும் அஞ்சனா தேவிக்கு சிவ பெருமான் அருளால் மார்கழி மாதம் “மூலம்” நட்சத்திர நாள் அன்று ஆஞ்சநேயர் பிறந்தார். இவருக்கு மாருதி அனுமார், ஹனுமான், சிரஞ்சீவி என்ற பெயர்களும் உண்டு. இவரை சிவனின் அவதாரமாகவும் கருதுபவர்கள் உண்டு. வைணவக் கோவில்களில் அனுமாருக்கு தனி சன்னதி உண்டு. பல இடங்களில் இவருக்கு தனிக் கோவிலும் அமைத்துள்ளனர்.

சதா சர்வ காலமும் ராமரையே நினைத்துக் கொண்டு அவர் நாமத்தையே ஜெபித்துக் கொண்டும் தன் பக்தியை உணர்த்திய ஆஞ்சநேயர், தன் மார்பையும் பிளந்து அதில் சீதா சகிதமாய் ராமர் இருப்பதை வெளிப்படுத்தி பக்தியின் உச்சத்தை தொட்டுவிட்டார். பக்திக்கு சிகரமாய் விளங்கும் அனுமன் பிறந்த நாளே அனுமன் ஜெயந்தி என்று கொண்டாடப்படுகின்றது. அனுமன் ஜெயந்தி, ஜெயந்திகளுக்கு எல்லாம் ஜெயந்தி.

பொதுவாக தெய்வங்களின் அவதார நாள் அன்று அந்தத் தெய்வங்களை ஆராதிப்பதும், பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்துவதும், விரதம் இருப்பதும் தொன்று தொட்டு நாம் கடைபிடித்து வரும் சடங்கு என்று கூடக் கூறலாம்.

ராம நாம மகிமை:


அனுமன் என்றாலே ராமர் என்பது தனித்து பிரிக்க முடியாதது. அனுமன் வழிபாட்டில் ராம நாம ஜெபத்தை விட சிறந்த ஒன்று இருந்து விட முடியாது.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம் பாஷ்பவாரி பரிபூரண லோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

எங்கெல்லாம் ராம நாமம் இருக்கின்றதோ அங்கெல்லாம் அனுமன் சூட்சும ரூபத்தில் வந்து அருள் புரிகிறார்.

எனவே தாரக மந்திரமாகிய ராம நாம ஜெபம் எல்லா வகையான பேறுகளையும் அளிக்க வல்லது. ராம நாம ஜெபம், அனுமன் ஜெயந்தி அன்று செய்வது மிக நல்லது. உடல் மன வலிமை, ஆத்ம பலம், என அனுமனின் அளவில்லாத அருள் கிட்டும்.



Leave a Comment