உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளிலும் குடிகொண்டிருக்கும் ஜீவகாருண்ய சாயி
உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளிலும் பாபாவே குடிகொண்டிருக்கிறார் . பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்து இருக்கும் அந்த கருணாமூர்த்தி , மக்களிடம் காட்டியதைப் போலவே மாக்களிடமும் கருணை மழை பொழிந்தார்.
பாபாவின் பார்வையில் அனைத்து உயிரினமும் ஒன்றே என்று நிலைநாட்டியதன் நோக்கம் , நாம் இவ்வுலகில் காணப்படும் உயிர் அனைத்திடமும் கருணையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே . பிற உயிரிடத்தில் நாம் காட்டும் அன்பே பாபாவிற்கு செய்யும் சேவை என்பதை தனது பக்தர் மூலம் மக்களுக்கு உணர்த்திய சம்பவத்தைப் பார்ப்போம் .
சீரடியில் பாபாவின் தீவிர பக்தையான திருமதி தர்கட், ஒருமுறை, மதிய உணவு தயார் செய்துகொண்டிருந்தார். மும்முரமாக சமையல் செயத்துக்கொண்டிருந்த வேளையில் மிகுந்த பசியுள்ள நாய் ஒன்று அவர் வீட்டு வாசலில் விடாமல் குரைக்கத் தொடங்கியது. நாய் பசியால் தான் குரைக்கிறது என்பதை உணர்ந்த தர்கட்டின் மனம் உருகியது. தன் கையில் கிடைத்த ரொட்டித் துண்டை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தார்.
காய்ந்த ரொட்டித் துண்டைப் மிகுந்த பரிவோடு நாயின் முன் வீசினார். வாலைக் குழைத்து ஓடிவந்த அந்த நாய், ரொட்டித் துண்டை வாயால் கவ்விக் கொண்டது. தன் பசி தீர அதை ஆவலுடன் உண்ணத் தொடங்கியது. தர்கட்டை நன்றியோடு பார்த்து வாலை ஆட்டியது . சந்தோஷத்தில் அதன் கண்கள் பளபளவென மின்னிக்கொண்டிருந்தன. நாய் உண்பதைப் பார்த்து நிறைவடைந்த தர்கட், சமையலறை நோக்கிச் சென்றார். சமையல் முடித்துச் சாப்பிட்டுவிட்டு, பாபாவை தரிசிக்க மசூதிக்குச் சென்றார்.
தர்கட்டை அன்போடு பார்த்த பாபா பேசலானார்.அம்மா! நான் மிகுந்த பசியோடு இருந்தேன். நீ கொடுத்த உணவால் பசியாறினேன். என் வயிறு நிறைந்தது. எப்போதும், இன்று நீ நடந்து கொண்ட விதத்தை நினைவில் கொள்.இப்படியே தொடர்ந்து நடப்பாயாக. என் பசிக்கு உணவிட மறந்துவிடாதே! தர்கட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. பாபாவுக்கு அவள் இன்று உணவிடவே இல்லையே? அவள் தயக்கத்தோடு பாபாவிடம் விளக்கம் கேட்டாள்: சுவாமி! நான் இன்று உங்களுக்கு உணவு வழங்கவே இல்லையே?
நீ அன்போடு அளித்த மொறுமொறுப்பான காய்ந்த ரொட்டியை நான் தானே அம்மா சாப்பிட்டேன்? நீ என் பசியைக் கண்டு இரக்கத்தோடு அதை எனக்கு வீசிப் போட்டாயே? அதற்குள்ளாகவா மறந்து போனாய்? எல்லா உயிரினங்களிலும் நான் தானே இருக்கிறேன்? எல்லாமாகவும் நான் தானே உலவிக் கொண்டிருக்கிறேன்?பசிக்கும் ஜீவன் எதற்கு உணவளித்தாலும், அது என்னையே வந்து சேரும். நீ அளித்த ரொட்டி என்னை வந்து சேர்ந்துவிட்டது! இதைக் கேட்ட திருமதி தர்கட் மெய் சிலிர்த்தார். பாபா எங்கும் நிறை ஞானப் பிரம்மம் என்பதை திருமதி தர்கட்டும் , அங்கிருந்த பக்தர்களும் உணர்ந்து கொண்டனர்.
Leave a Comment