புத்திர யோகமும், பூமி பாக்யம் தரும் அங்காரகனின்  அருளை பெற.... 


நம்மையும்,இந்தப் பிரபஞ்சத்தையும் ஆள்வது நவக்கோள்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஜாதக ரீதியாக கிரக தோஷம் உள்ளவர்கள் அந்த தாக்கத்தில் இருந்து தப்பிக்க பல விரதங்கள், வழிபாடுகள், நேர்த்திக் கடன்கள் கடைபிடிப்பது வழக்கம்.  இதை முறையாக செய்வதன் மூலம் பிரச்னைகளின் தாக்கம் குறைவதுடன் உடலும், உள்ளமும்  இறைவன் மீது செலுத்த வாழ்வில் அமைதியும், சந்தோஷமும் கிடைக்கிறது. அவரவர் ஜாதக ரீதியாக ஏற்படும் தோஷ நிவர்த்திக்கு நவக்கிரக வழிபாடு மிகவும் அவசியமானது.

 நவ கோள்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக ஆற்றலிலும்,பராக்கிரமத்திலும் , மங்களன் என்று அழைக்கப்படும் செவ்வாய்க்கிரகம் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

 ஒரு சமயம், சிவபெருமான் தனியாக யோகத்தில் அமர்ந்திருந்த நேரம், அவரது நெற்றிக் கண்ணில் இருந்து, ஒரு நீர்த்துளி பூமியில் விழ,  அதில் இருந்து மங்களன், ஒரு குழந்தை வடிவாகத் தோன்றினார். பூமாதேவியால் எடுத்து வளர்க்கப்பட்ட மங்களன், சிவபெருமானை நோக்கிக் செய்த கடும் தவத்தின் காரணமாக, நவகிரகங்களில் ஒருவராக  இருந்து அங்காரகன் என்னும் பெயரையும் பெற்றார்.

 நெருப்புக்கு அதிபதியாக விளங்கும் இவர், வீர தீர செயல் புரிதல், அதிகாரம் செலுத்துதல்,ஆளுமைத் திறன், தைரியம், நம்பிக்கை, நாணயம், நேர்மை, வளைந்து கொடுக்காத தன்மை,உயர் பதவி, தலைமை பொறுப்பு போன்ற இத்தனையையும்  ஒருவருக்கு அள்ளித் தரக்கூடிய வல்லமை பெற்றவர். 

ஒருவருக்கு,தோற்றத்தில் கம்பீரம், நடையில் மிடுக்கு, குரலில் அதிகாரத்தை ஏற்படுத்தி தரக்கூடியவர் அங்காரகன். நம் உடலில் ரத்தத்துக்கு காரகமாக செவ்வாய் இருப்பதால், ஒருவருக்கு செவ்வாய் பலம் குறையும் போது, உடலில் ரத்த சம்பந்தமான நோய்கள் தோன்றும். செவ்வாய்க்கு பூமி காரகன் என்ற அமைப்பும் உள்ளதால் ,இவரது பார்வை பட்டால் தான்  நிலம், வீடு, தோப்பு துரவு போன்ற அசையா சொத்துக்களை வாங்க முடியும்.

செவ்வாய்க்குரிய கடவுள் ஆறுமுகப்பெருமாள்.ஆதலால்  முருகன் குடிகொண்டுள்ள எல்லா ஸ்தலங்களுக்கும் செவ்வாய் பரிகார ஸ்தலமாகும். ஒருவருக்கு செவ்வாய் கிரகத்தால் தோஷம் இருப்பின் அறுபடை வீடுகளுக்கு சென்று முருகப் பெருமானை வணங்குவதால், நிவர்த்தி ஆகும். இதில் பழநியில் கோவில் கொண்டுள்ள தண்டாயுதபாணி சாட்சாத் செவ்வாயாகவே அருள்பாலிக்கிறார். மயிலாடுதுறை அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலும், செவ்வாய்க்குரிய பரிகார ஸ்தலங்களில் முக்கியமானதாக விளங்குகிறது.

 தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ், மற்றும் முருகன் துதி பாடல்களை மனமுருகப் பாடுவதன் மூலம் ,முருகன் மற்றும் செவ்வாய் எனப்படும் அங்காரகனின்  அருளை பெற முடியும். மேலும் புத்திர யோகமும் பூமி பாக்யம் உள்ளிட்ட சகல யோகங்களும் நம்மை தேடி வரும்.

ஓம் முருகா ! ஓம் முருகா!! ஓம் முருகா !!!



Leave a Comment