திருப்பதி கோயிலுக்கு பசு தானம் வழங்க தேவஸ்தானம் கோரிக்கை....
கோவிலுக்கு பசு தானம் திட்டத்தின் கீழ் 32 கன்றுடன் கூடிய பசு மாடுகள் தானமாக வழங்கி ஏழுமலையான் கோவிலுக்கு கன்றுடன் கூடிய நாட்டு மாடுகளை தானமாக வழங்க பக்தர்கள் முன்வரவேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் செயல்பட்டுவரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோசாலையில் இன்று அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி 32 கன்றுகளுடன் கூடிய நாட்டு மாடுகள் மற்றும் ஒரு காளை மாட்டை தானமாக வழங்கினார். இந்த மாடுகளுக்கு வேத பண்டிதர்கள் மூலம் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு பசுக்களின் பராமரிப்பு மற்றும் தீவனத்திற்காக ரூ 1 லட்சம் நன்கொடையாக கோசாலை இயக்குனர் ஹரிநாத் ரெட்டியிடம் வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்பா ரெட்டி கோமாதாவை வழிபடுவது தாய் தந்தையை மற்றும் முக்கோடி தேவதைகளை வழிபடுவதற்கு சமம் என நமது சம்பிரதாய கலாச்சாரத்தின் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நமது தேசிய நாட்டு மாடுகளை பாதுகாத்து அதன் இனவிருத்தி செய்யும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோவிலுக்கு கோ தானம் என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட்டு விஜயவாடா கனகதுர்க்கை அம்மன் கோவிலுக்கு கன்றுடன் கூடிய பசு மாடு தானமாக வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
தொடர்ந்து தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு கன்றுடன் கூடிய பசு மாடு தானமாக வழங்கப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் பசு தானம் செய்யும் திட்டத்தில் பக்தர்களும் தங்களின் பங்களிப்பை வழங்கலாம். இதற்காக பக்தர்கள் தங்களால் இயன்ற நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய மருத்துவர் சான்றிதழுடன் கூடிய நாட்டு பசு மாட்டை கன்றுடன் தேவஸ்தான கோசாலைக்கு நன்கொடையாக வழங்கலாம்.
மேலும் கோவிலுக்கு கோ தானம் திட்டத்தில் பசுமாட்டை பெற நினைப்பவர்கள் பசுமாட்டை பெற்று அதனை பராமரித்து வளர்ப்பதற்கான போதிய நிதி உள்ளவர்கள் தேவஸ்தானத்தை நாடினால் வழங்கப்படும். தேவஸ்தானம் நன்கொடை வழங்கும் பசுமாட்டிற்கும் கால்நடை மருத்துவர் மூலம் ஆரோக்கியத்துடன் கூடிய பசு மாடு என்ற சான்றிதழுடன் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Leave a Comment