பாவ கணக்கை குறைத்து புண்ணிய கணக்கை கூட்டும் சித்திரை பவுர்ணமி வழிபாடு


 

தமிழ் மாதங்களில் முதலாவதாக போற்றப்படும் சித்திரை மாதத்திற்கு பல சிறப்புகள் உண்டு .  சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் . படைப்பு கடவுளான பிரம்மதேவன் தான் சித்திரை முதல் நாளை படைத்ததாக நம் புராணங்கள் கூறுகின்றன. மற்ற எல்லா பவுர்ணமிகளைக் காட்டிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த சித்திரை பவுர்ணமியும்  இம்மாதத்தில் வருவதால் இதன் சிறப்பு இன்னும் அதிகமாகிறது . சித்திரை மாதத்தில் பௌர்ணமி வருவதால் சித்ரா பௌர்ணமி என்று அழைக்கின்றனர்.

எல்லா மாதங்களிலும் தான் பவுர்ணமி வருகிறது . அதென்ன சித்திரை மாதத்து பவுர்ணமிக்கு அப்படி ஒரு விசேஷம் ?

இன்றைய நாளை  சித்திர  குப்தன் பிறந்தநாள் என்றும், இன்னும் சிலர் சித்திர  குப்தனின் திருமண நாள் என்றும் கூறுவர் .  இதன் பின்னணியில் சில புராணக்கதைகள் சொல்லப்படுகிறது .

இவ்வுலகின் பாவ புண்ணிய  பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்ட ,  சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் , சித்ரா பவுர்ணமி தினத்தில் அவதரித்தார். அண்ட சராசரங்களிலுள்ள முன்னாள் கணக்குகளையும், பிரம்மா விஷ்ணு முதலானவர்களுடைய பாவ புண்ணிய கணக்குகளையும் தினமும் தமக்குத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சித்திர புத்திரனார் கயிலையிலிருந்து கொண்டு கணக்குகளை எழுதிவந்தார்.

 

ஒரு சமயம் தேவேந்திரன் தனக்கு மக்கட்பேறு வேண்டுமென்று தருமங்கள் பல புரிந்து இறைவனை நோக்கி இந்திராணியுடன் தவம் புரிந்தார். சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் இந்திராணி தவத்தை எடுத்துரைத்துப் பின்னர், சித்திரபுத்திரரை இந்திரனுக்குப் புத்திரனாகப் பிறந்து, அவன் கவலையை தீர்க்குமாறு அருள்புரிந்தருளினார். அங்ஙனமே சித்திரபுத்திரனார் காமதேனுவின் வயிற்றில் உதித்து பாவ புண்ணியங்களைப் பகுத்து வந்தார்.

 

சித்திர புத்தரைப் பற்றி இன்னும் ஒரு சுவாரசியமான கதையும் சொல்லப்படுகிறது . கோடிக்கணக்கான மக்களின் பாவ, புண்ணியங்களை தான் ஒருவரே மேற்பார்வையிடும் பணி எமதர்மனுக்கு சிரமமாக இருக்கவே ஈசனிடம் சென்று முறையிட்டார் .  ஈசனும் அவருக்கு மனமிரங்கி , அருகில் நின்றிருந்த பிரம்மனிடம் எமதர்மனுக்கு ஒரு உதவியாளனைத் தரவேண்டியது பொறுப்பை ஒப்படைத்தார் . எமனின் தந்தையான சூரியபகவானிடம்  பிரம்மன் அச்செயலை ஒப்படைக்கும் பொருட்டு , சூரியனுக்குள் ஒரு அக்னியை தோற்றுவித்தார்.

 

இதன் காரணமாக சூரியன் வானில் சஞ்சரிக்கும்போது எதிர்பட்ட வானவில்லை ஏழு வண்ணங்களாக  ஒருங்கிணைக்க அது ஒரு பெண்ணாக உருமாறியது .  அப்பெண்ணை நீனாதேவி என்று பெயரிட்டு அவளுடன் வாழ்ந்து வந்தார். அதன் காரணமாக ஒரு சித்திரைத் திங்களில், பௌர்ணமி நாளில் பிறந்த புத்திரனுக்கு சித்திர புத்திரன் என்று பெயரிட்டனர். அக்குழந்தையின் இடக்கையில் ஏடும், வலக்கையில் எழுத்தாணியுமாக தோன்றினார். வானவில்லான அவரது தாயின் பல வண்ணங்களை உணர்த்தும் பொருட்டுதான் சித்திரகுப்தருக்கு பல வண்ண துணியை சாற்றுகிறோம் .

ஒரு சமயம் சித்ரகுப்தர் காஞ்சியில் சிவபெருமானை கடுமையாக பூஜை செய்ததன் பலனாக , அறிவாற்றலும் எல்லா சித்திகளும்  அவருக்கு கிடைத்தன. வரம் பெற்றவர்கள் வழக்கம் போல் செய்வது போல் சித்திர குப்தரும் தனது சக்தியினை சோதிக்க விரும்பி படைப்புத் தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்தார். இதனால்  பிரம்மா உட்பட தேவர்கள் அனைவரும் அதிர்ந்தனர். இதனை  அவரது தந்தையான சூரியனிடம் தெரிவித்தனர். உடனே சூரியன் மகனிடம் மக்களின் இரவு,பகல் என்று பொழுதினைக் கணக்கிட்டு, மக்களின் வாழ்க்கையை நடைமுறைப்படுத்துபவன் நான். என் மகனான நீயும் அதே போல்  மக்களின் கணக்கினை அதிலும் பாவ, புண்ணியத்தை கணக்கெடுப்பாயாக. படைப்புத்தொழில் உனக்கன்று. அது பிரம்மனின் தொழில் என்று எடுத்துரைத்தார் .   

மேலும், தனது மகனுக்கு திருமணம் செய்தால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வருவான் என்று நினைத்த  சூரியன், சித்திரகுப்தருக்கு மனைவியாக வரவேண்டி தவம் புரிந்த கன்னியர்களான சிவாம்சத்தில் உதித்து சத்ரிய தர்மத்தை வகித்த மயப்பிரம்மனின் மகள் நீலாவதி, அந்தணர் தர்மத்தை வகித்த விஸ்வ பிரம்மாவின்  மகளான கர்ணகி ஆகியோரை  தன் மகனுக்கு திருமணம் செய்வித்தார்.

சித்திரகுப்தன் பணியினை மறந்து இல்லற வாழ்க்கையில் மூழ்கி தன் கடமை மறந்தார் .  இதனால் மீண்டும் கலவரம் அடைந்த எமதர்மன் நேராக தந்தை சூரியனிடம் சென்று தன் மனக் குறையை விளக்கினார். சூரியனும் சித்ரகுப்தருக்கு அவரின்  பொறுப்புகளை விளக்கி எமதர்மனுக்கு உதவிபுரிய அனுப்பிவைத்தார். தன் மனைவியருடன் எமபுரிக்கு புறப்பட்ட சித்ரகுப்தர் அங்கே அமர்ந்து மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எந்த தவறும் வராதபடி இப்பொழுதும் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

 

சித்திரை பவுர்ணமி விழா  

 

சித்திரை பவுர்ணமி விழா  சைவர்களுக்கு மிக முக்கிய விழாவாக கருதப்படுகிறது . இந்த விழாவை  கொண்டாடுவதன்  மூலம் எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தர்,  தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும்.

இந்த பூஜை  இன்றளவும்  கிராமப்புறங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது . அன்றைய தினம் வீட்டின் பூஜை  அறையில் சித்திர குப்தன் படியளப்பு எழுதி , கூடவே விநாயகர் படத்தினை வைத்து  அதற்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கல் படையலிடுகின்றனர். மேலும் இவற்றோடு காய்கறி ,பருப்பு மற்றும்  தயிர் கடையும் மத்தினையும் வைக்கின்றார்கள். சித்திர குப்தரிடம் "எங்களில் மலையளவு பாவத்தினைக் கடுகளகாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக் கொள்" என வேண்டுகின்றனர். இந்நாளில் சித்திர குப்த நாயனாரின் புராணத்தினைப் படிப்பதைக் கிராமத்தில் இன்றும் வழக்கமாக வைத்துள்ளார்கள்.இந்த நாளில் கடல், ஆறு, வாயக்கால் போன்ற நீர்நிலைகளில் நீராடுவதும் சிறப்பு .

 

இந்திரன் தன் குருவை அலட்சியம் செய்த பாவம் அகலுவதற்காக மதுரைக்குச் சென்று அங்கிருந்த சுயம்பு மூர்த்திக்கு இந்திர விமானம் அமைத்து வழிபட்டு தன் பாவத்தைப் போக்கிக் கொண்டான் என்றும் சொல்லப்படுகிறது . ஆண்டுதோறும் தேவேந்திரனே நேரில் வந்து சுந்தரேஸ்வரருக்கு இந்நாளில் பூஜை செய்வதாக ஐதீகம். அந்தப் புண்ணிய தினத்தில் அன்னதானம் செய்வது மிகச்சிறந்தது என்றும் கூறுவர்.

 

இவ்வளவு  சிறப்புமிக்க சித்திரகுப்தருக்கு  காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சன்னதியும் உள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே கோடங்கிப்பட்டி, கோவை சிங்காநல்லூர் எமதர்மன் கோயில்களிலும் சித்ரா பவுர்ணமி தினத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்ய கடன் வசூலாகும், வாணிபம் சிறக்கும், ஆயுள்பலம் கூடும் என்பது மக்களிடையே  காலகாலமாக  நிலவி வரும் நம்பிக்கை.

 

இத்தகைய சிறப்புமிக்க இன்றைய சித்திரை பவுர்ணமி தினத்தில் நாமும் தனங்கள் பல செய்து நமது புண்ணியக் கணக்கில் அதிக வரவினை வைப்போம் . 



Leave a Comment