பிரதோஷ காலத்தில் அபிஷேகம், அலங்காரம் செய்யும் முறை
பிரதோஷ காலத்தில் முதலில் நந்திதேவருக்கு அபிஷேகம் செய்து அலங்கரிக்க வேண்டும். அரிசி மாவினால் அகல் செய்து தூய்மையான பசு நெய் ஊற்றி பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்ற வேண்டும். அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த பச்சரிசியை நிவேதனம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
பிரதோஷ கால அபிஷேக முறையில் "பால் அபிஷேகம்'' என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆகவே பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்து இயன்றளவு பால் கொண்டு வந்து கொடுத்து அபிஷேகத்தில் கலந்து கொள்வது சிறப்பான பலனைத் தரும்.
அத்துடன் தாய்மார்கள் பால் குடம் எடுத்துக் கொண்டு முறையாக கோவிலை ஒருமுறை வலம் வந்து, பிறகு அக்குடங்களில் உள்ள பாலைக் கொண்டே அபிஷேகம் செய்வது என்பது மிகவும் சிறப்பான பலனைத் தரும். நந்திதேவருக்கு அபிஷேகம் செய்யும் அதே நேரத்தில், தேவியுடன் கூடிய சந்திரசேகர சாமிக்கும் அபிஷேகம் செய்து அலங்கரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.
பிறகு கோவிலை மூன்று முறை வலம் வரச் செய்ய வேண்டும். கூடவே நாமும் உடன் சென்று வலம் வருதல் வேண்டும். அப்போது முதல் சுற்றில் வேதபாராயணமும், இரண்டாவது சுற்றி திருமுறைபாராயணமும், மூன்றாவது சுற்றில் நாதஸ்வர இன்னிசையும் இசைக்க வேண்டும்.
அத்துடன், பிரதோஷ காலத்தில் சாமி வலம் வரும்போது வெண்சாமரம் வீசுவதுடன், குளிர்ச்சி தரும் மருத்துவ குணம்கொண்ட மயில்பீலியிலான விசிறிகளைக் கொண்டு வீசுவதும் மிகுந்த பலன் தருவதாகும். சிவபெருமான் நஞ்சுண்டு களைத்திருந்த நேரத்தில் அஸ்வினி தேவர்கள் மயில்பீலியைக் கொண்டு விசிறினார்கள் என்கிறது புராணம்.
சாமி வலம் வரும் ஒவ்வொரு சுற்றிலும் மூலகோண திசைகளில் கண்டிப்பாக தீப வழிபாடு செய்ய வேண்டும். அத்துடன் சாமி மூன்றாவது சுற்றுவரும் போது மட்டும் வடகிழக்கு மூலையான ஈசான மூலையில் சாமியைத் தெற்கு திசை நோக்கி இருக்குமாறு சிறிது நேரம் நிறுத்தி சிறப்பு தீபவழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை "பூத நிருத்த வழிபாடு'' என்று கூறுவர்.
அந்த நேரத்தில் சாமியைத் தரிசித்து வணங்கி வழிபாடு செய்வது பெரும் புண்ணியமாகும். அவ்வாறு சாமி அன்னையுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வலம் வரும் அழகை தரிசித்து பலன் பெற விரும்புவோர் முதலில் நந்திதேவரைத் தரிசித்து, பிறகு அன்னையைத் தரிசித்து, அதன் பிறகுதான் ஈசனை தரிசித்து வணங்க வேண்டும்.
Leave a Comment