தூணிலும் இருப்பார் , துரும்பிலும் இருப்பார்.... எல்லா உயிர்களுக்கும் தாயான சாய்....
தூணிலும் இருப்பார் , துரும்பிலும் இருப்பார் இறைவன் என்பார்கள் . கண்கண்ட கருணை தெய்வமான பாபா எல்லா ஜீவராசிகளிலும் நிறைந்து இருக்கிறார் . சீரடியில் பல்லி ஒன்றை வைத்து சாய் நிகழ்த்திய அற்புதத்தை இப்பதிவில் காண்போம் .
இறைவனின் படைப்புகளில் ஆறறிவு படைத்த மனிதன்தான் அனைத்தை விடவும் ஒரு படி மேல் . ஆனால் அவன் தான், தன் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றிற்கும் கூட அதிகமாக கவலைப்படுவான் . அதே , ஐந்தறிவு கொண்ட ஜீவன்கள் இறைவன் கொடுத்த வாழ்க்கையை சுதந்திரமாக சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு நம்மை காட்டிலும் எதிர்காலத்தை உணர்ந்துக் கொள்ளும் ஆற்றலை இறைவன் தந்துள்ளான் .
ஒருமுறை பாபா மசூதியில் அமர்ந்திருந்தபோது மசூதிச் சுவரில் ஒரு பல்லி டிக்டிக் என்றது. அவர்முன் அமர்ந்திருந்த பக்தர் ஒருவருக்கு அது கெட்ட சகுனமா நல்ல சகுனமா? என்ற சந்தேகம் எழுந்தது . அதை பாபாவிடம் கேட்க , அவரோ இந்தப் பல்லியைப் பார்க்க இதன் சகோதரி அவுரங்காபாத்திலிருந்து வந்து கொண்டிருப்பதை இது உணர்ந்து விட்டது. அதுதான் மகிழ்ச்சியுடன் குரல் கொடுக்கிறது! என்றார் . கேட்டவர்களுக்கு நம்பவும் முடியவில்லை , ஆனால் சொனது பாபா என்பதால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை . அதனால் எல்லோரும் அந்த சகோதரிப் பல்லியைப் பார்ப்பதற்காக, ஆவலோடு காத்திருந்தனர். பாபா! வெறும் ஐந்தறிவு மட்டுமே உள்ள விலங்குகள் எப்படி இவற்றையெல்லாம் அறிகின்றன? என அந்த பக்தர் வியப்போடு கேட்டார்: பாபா பக்தரைக் கூர்மையாகப் பார்த்தார்.
அந்த பக்தருக்கு இப்போது ஒன்று புரிந்தது. பாபாவைப் பொறுத்தவரை விலங்குகள், பறவைகள், மனிதர்கள், தாவரங்கள் எல்லாமே அவருக்கு ஒன்றுதான். எல்லாமே அவரது படைப்புத்தான் என்பதால், எல்லாவற்றின் மீதும் பாபாவுக்கு நிரந்தரமான தாய்ப்பாசம் உண்டு! இப்படி அந்த பக்தர் நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான், ஜல் ஜல் என்ற சப்தத்துடன் ஒரு குதிரை சீரடி மசூதியின் வாசலில் வந்து நின்றது. பாபாவை தரிசிக்கும் ஆவலோடு அவுரங்காபாத்தில் இருந்து வந்த ஒரு பிரமுகர் குதிரை மேலிருந்து தாவிக் கீழே இறங்கினார். பாபாவை தரிசித்த பின், அதே குதிரையில் தனது பயணத்தைத் தொடர விரும்பினார் அவர். ஆனால் குதிரை நகர மறுத்தது.
குதிரைக்கு நல்ல பசி போலிருக்கிறது என்று நினைத்த பிரமுகர் , அதற்கு கொள்ளு வாங்கி வர நினைத்தார் . கொள்ளை வாங்கி வர பிரமுகர் தன் தோளில் இருந்த ஒரு காலிப் பையை தூசியைப் போக்குவதற்காகக் கீழே உதறினார். சடாரென்று பையிலிருந்து ஒரு பல்லி கீழே விழுந்தது. தன்னிடம் கேள்வி கேட்ட பக்தரைப் பார்த்தார் பாபா. கீழே விழுந்த பல்லியின் அடுத்த செயல்பாடுகளைக் கவனிக்குமாறு கண்ணாலேயே கட்டளை இட்டார். சரசரவென வேகமாக ஊர்ந்து சென்ற அந்தப் பல்லி, சுவரில் ஏறியது. சுவரில் ஏற்கெனவே அதன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த பல்லியின் அருகே போய் நின்றது. அடுத்த கணம் இரண்டு பல்லிகளும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. பல்லிகள் ஒன்றையொன்று சுற்றிச் சுற்றி வந்தன. மகிழ்ச்சியோடு முத்தம் கொடுத்துக் கொண்டன. பாபாவின் சந்நிதானத்தில் அவை மிகுந்த மன நிறைவை அடைந்தன.
இந்த அபூர்வமான காட்சியைப் பார்த்த பக்தர் பிரமிப்பில் ஆழ்ந்தார். பாபா அந்த பல்லிகளைப் பற்றி தீர்க்கதரிசனமாக சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை ஆகிவிட்டதே? அவுரங்காபாத் எங்கே? சீரடி எங்கே? . அந்த பல்லிகள் மீண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்ததை எண்ணி பேச்சற்று போனதோடு , அனைத்து உயிர்களிடத்தும் பாபாவிற்கு உள்ள தாயன்பை நினைத்து நெக்குருகினார் .
விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் நுண்ணிய உணர்வுகளையும் , அதன் எதிர்காலத்தைப் பற்றியும் துல்லியமாக உணர்ந்தவர் நம் பாபா . துயருற்றும் , பாபாவின் கருணைக்கும் ஏங்கி தவிக்கும் நம் உணர்வுகளை அறியாதவரா பாபா? . மனம் உருகி உண்மையாக பாபாவின் திருப் பெயரை சொல்லி பிரார்த்திக்கும் போது நம் துயரங்கள் எல்லாம் சுவடு தெரியாமல் பறந்து விடும் .
ஓம் சாய் ராம்
Leave a Comment