திருப்பதி பெருமாள் முன் செல்லும்போது மட்டும் வேண்டுதல் மறந்துபோவதேன்?


பலமணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய திருமலை திருப்பதி கருவறைக்குள் செல்லும் போது நமது வேண்டுதல்கள் மறந்து போகிறது. கூட்ட நெரிசலால்தான் பெருமாளைச் சரியாகப் பார்க்க முடியவில்லை, நம் பிரார்த்தனையையும் சொல்ல இயலவில்லை என்று நாமே ஒரு காரணம் கற்பித்துக்கொண்டு சமாதானமும் அடைந்திருப்போம்.

ஆனால், உண்மை அதுவல்லவாம். பெருமாளை தரிசனம் செய்யும் கருவறைப் பகுதியில் இருக்கும் ஒரு விசேஷ சக்திதான் இப்படி நம் ஞாபகசக்தியை மழுங்கடித்துவிடுகிறதாம். கோயில் அர்ச்சகர்கள்,தேவஸ்தான அதிகாரிகள் மட்டும் கருவறைக்குள்ளே, மணிக்கணக்காக பெருமாளோடு இருக்கிறார்களே, இவர்கள்தான் எவ்வளவு சாவகாசமாக, மனநிறைவாக வேண்டிக்கொள்ளலாம் என்று நாம் சிலசமயம் பொறாமைகூட பட்டிருக்கிறோம். ஆனால், அவர்களுக்கும் அப்படி வேண்டிக்கொள்ள வேண்டும் என்று தோன்றுவதில்லையாம்.

நம் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. திருமலை பெருமாள் கருவறைக்கு முன்னால் இருக்கும் கருடாழ்வார் சந்நதியிலிருந்து கர்ப்பகிரகம் வரையிலான இடம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு ‘எனர்ஜி ஃபீல்ட்’ என்று கருதப்படுகிறது. தினமும் பெருமாளை தரிசிக்க கோடானுகோடி தேவர்கள், கின்னரர், கிம்புருஷர்கள் மற்றும் கருட, கந்தர்வ, சித்தா, சாத்யா, யட்சா, ராட்சசர் முதலான இனங்களைச் சேர்ந்த தேவதைகள் எல்லோரும் சுவாமியை தரிசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அதனால், அவர்கள் பெருமாளிடம் என்ன கோரவேண்டும் என்று நினைத்து வந்தார்களோ, அவற்றை நினைவுபடுத்திக்கொள்ள இயலாது போய்விடுவார்கள்! அதேபோல கருவறையில் பெருமாளை எந்த அலங்காரத்தில் தரிசித்தோம் என்ற நினைவும் மூளையில் தங்காமல் போய்விடுகிறது! ஆனால், நாம் பெருமாளைப் ‘பார்க்கிறோ’மோ இல்லையோ, தன் கருவறைக்கு முன் நிற்கும் ஒவ்வொருவரையும் பெருமாள் நிச்சயமாகப் பார்க்கிறார்.

நம் வேண்டுதல்களை அவர் அந்தக் கணத்திலேயே ஈர்த்துக்கொண்டுவிடுகிறார்; உடனேயே அவற்றை நிறைவேற்றியும் வைத்து விடுகிறார். அதனாலேயே அவரிடம் ‘போய்ச் சேர்ந்துவிட்ட’ அந்த வேண்டுதல்களை நாம் மீண்டும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டாதபடி மறந்துவிடுகிறோம் என்பதுதான் அனுபவபூர்வமான உண்மை.



Leave a Comment