திருப்பதியில் முதல் முறையாக 10 நாட்களுக்கு வைகுண்ட துவாரத்தில் பக்தர்களை அனுமதிக்க முடிவு
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுப்பாரெட்டி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கக்கூடிய வைகுண்ட துவாரம் தரிசனத்தில் பத்துநாட்கள் பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
அதனடிப்படையில் நாடு முழுவதுமுள்ள மடாதிபதிகள் மற்றும் பீடாதிபதிகளின் ஆலோசனைகளை கேட்டு அதன்படி இந்த ஆண்டு டிசம்பர் 25 -ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி அன்று வைகுண்ட துவாரம் திறக்கப்பட்டு 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு வைகுண்ட துவாரம் வழியாக அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கிய நிலங்கள் எக்காரணத்தைக் கொண்டும் விற்காத வகையில் இது வரை விற்பனை செய்யப்பட்ட நிலங்கள் மற்றும் தற்போது உள்ள நிலங்கள் விவரங்கள் என மொத்தம் 1128 சொத்துகளுக்கான 8088.89 ஏக்கர் நிலத்திற்கான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சொத்து விபரங்கள் அனைத்தும் தேவஸ்தான இணையதள முகவரியில் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது. திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் கொடிமரம், பலிபீடம், மகா துவாரத்திற்கு தங்க தகடுகள் பதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்களுக்கு சீருடைகள் வழங்குவதற்கான அலவன்ஸ் 2000 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மலைப்பாதையில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக நிழல் பந்தல் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் பாதயாத்திரையாக வரக்கூடிய அலிபிரி மலைப்பாதையில் உள்ள காளி கோபுரம் புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருமலையில் சுற்றுச்சூழல் பாதிக்காமல் காப்பாற்றுவதற்காக பிளாஸ்டிக்கை தடை செய்யப்பட்டு இருப்பதோடு திருமலையில் பசுமை நகரமாக மாற்றப்பட உள்ளது. இதற்காக திருமலையில் 100 முதல் 150 பேட்டரி எலக்ட்ரானிக் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமலை முழுவதும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ( பசுமை மின்சாரம் ) சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சூரிய பிரபை வாகனம் 11.76 லட்சம் ரூபாயில் தங்க தகடுகள் பதிக்கப்பட உள்ளது. சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கீடு செய்யக்கூடிய திருமலையில் உள்ள காட்டேஜ்கள் ரூ 29 கோடியில் புதுப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி இருந்தபோது தொடங்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கான இலவச திருமணம் செய்யும் கல்யாணம் மஸ்து திட்டத்தை விரைவில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழைகளுக்காக கல்யாண மஸ்து திட்டத்தை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
திருப்பதியில் உள்ள அனாதை பிள்ளைகளுக்கான பால மந்திரத்தில் அடிப்படை தேவைகளுக்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டையில் நான்கு ஏக்கரில் பத்து கோடி ரூபாய் மதிப்பில் ஏழுமலையான் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் வங்கியில் மட்டுமே தேவஸ்தானத்தின் முதலீடுகளை ( டெபாசிட் ) செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
Leave a Comment