அரசாளும் வரம் தரும் கார்த்திகை தீப திருநாள் விரதம்..... 


 கார்த்திகை மாதம் பவுர்ணமி திதியில் விளக்கேற்றி வழிபட எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கிருத்திகை நக்ஷத்திரத்திற்கு உரிய தெய்வம் அக்னி பகவான். சூர்ய அக்னி அம்சம், கிருத்திகை அக்னி அம்சம், அங்காரக அக்னி அம்சம் இந்த மூன்றும் இணைவதால் அன்று மஹா தீபம் என்றும் கார்த்திகை தீபம் என்றும், தீபம் ஏற்ற மிக உகந்த நன்னாள் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வியர்வை துளிகளை பூமி தேவி தாங்கிக் கொண்டு, அதனால் உண்டான குழந்தையை வளர்த்துவர, அந்தக் குழந்தை வளர்ந்து சிவனை துதித்து பெரும் தவம் செய்ய, தவத்தினால் தேகம் முழுக்க அக்னியாக, தவத்தில் பெரிதும் மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவருக்கு, கிரஹ பதவி அளித்தார். 

கிரஹ பதவி பெற்றவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். பூமி காரகன் என்றும் பூமி புத்ரன் என்றும் போற்றப்படுபவர். அவரும் அக்னி வர்ணமாகக் காட்சி அளிக்கக் கூடியவர். எனவேதான் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரமும் பவுர்ணமியும் சிறப்பானதாக கொண்டாடப்பபடுகிறது.

முதல்நாள் பரணி தீபம் எனப்படும். பரணி காளிக்கு உரிய நாளாகும். ஆதிநாளில் காளிதேவியை வழிபடும் நோக்கத்தில் பரணி தீபத்தைக் கொண்டாடினார்கள்.

கார்த்திகை மாதக் கிருத்திகை நட்சத்திரத்தில், மலையின் உச்சியில் விளக்கேற்றுவதுடன் இல்லங்கள்தோறும் ஏராளமான விளக்குகளை ஏற்றுகின்றனர். இது, சிவபெருமானைக் குறித்துக் கொண்டாடும் விழாவாகும். இதை, திருக்கார்த்திகை தீபம், அண்ணாமலையார் தீபம் என்று அழைக்கின்றனர்.
 



Leave a Comment