நாக சதுர்த்தி - புராணக் கதை !
இது பற்றி பல்வேறு புராணக் கதைகள் கூறப்படுகின்றன. காஸ்யபருக்கும் கத்ரு என்பவளுக்கும் நாகங்கள் பிறந்தன. அவை வளர்ந்த பிறகு தாய் சொல்லைக் கேட்காமல் தன் போக்கில் நடக்கத் தொடங்கின. அதனால், கோபம் கோண்ட தாயார் கத்ரு, ``தாய் சொல்லைக் கேட்காததால் தீயில் விழுந்து இறப்பீர்களாக” என்று சாபம் கொடுத்துவிடுவாள். ஜனமேஜயன் மூலம் அந்தச் சாபம் பிற்காலத்தில் நிறைவேறும்.
நாகங்களின் தலைவனாக விளங்கிய ‘தட்சகன்’ எனும் கொடிய நாகம் தீண்டி பரீட்சித் எனும் அரசன் இறந்துவிடுவான். தந்தையை இழந்து வாடிய பரீட்சித்தின் மகன் ஜனமேஜயன் தந்தையின் இறப்புக்குக் காரணமாக விளங்கிய பாம்பு இனத்தையே அழிக்க வேண்டும் என்று உறுதி கொண்டு ’சர்ப்பயக்ஞம்’ எனும் வேள்வி செய்வான்.
அந்த வேள்வியில் பாம்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாக விழுந்து இறக்கும். பாம்புகள் அனைத்தும் அழிவதைக் கண்ட அஸ்தீகர் எனும் முனிவர் ஜனமேஜயனது வேள்வியைத் தடுத்து நிறுத்தி நாகர்களுக்குச் சாப விமோசனம் அளித்து, பாம்பினத்தைக் காப்பார். ஆஸ்திக முனிவர் நாகங்களுக்குச் சாப விமோசனம் அளித்ததும் இந்த ‘நாக சதுர்த்தி’ தினத்தில்தான். இந்த நாளில் அஷ்ட நாகங்கள் என்று அழைக்கப்படும் வாசுகி, ரட்சகன், காளிங்கன், மணிபத்ரன், ஜராவதன், திருதராஷ்டிரன், கார்கோடகன், தனஞ்சயன் ஆகிய நாகங்களை வணங்க வேண்டும்.
பகவான் அனந்தன் என்னும் நாக வடிவில் உலகத்தைக் காத்துக் கொண்டிருக்கிறார் என்று நம்பப்படுகிறது. அனந்தனுக்குத் துணையாக பாதாள லோகத்தில் தட்சகன், வாசுகி, கார்க்கோடகன் முதலான நாகங்களும் வசிக்கின்றன. அவர்களை வணங்கும் விதத்தில் பாம்புப் புற்றில் துள்ளு மாவு படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.
Leave a Comment