ஐயப்பன், மகிஷியை வதம் செய்த எருமேலி.....
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எல்லோரும் ஒன்று கூடும் இடம் எருமேலி. இங்கு பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் கட்டப்பட்ட தர்மசாஸ்தா கோயில் உள்ளது. வேட்டைக்குச் செல்ல அம்பும், வில்லும் ஏந்தி நிற்கின்ற உருவில் தர்மசாஸ்தா காட்சியளிக்கிறார்.
வாபர் கோயில்:
எருமேலியில் பேட்டை சாஸ்தா கோயில் எதிரில் ஐயப்பனின் முஸ்லிம் நண்பரான வாபரின் பள்ளி வாசல் உள்ளது. ஐயப்ப பக்தர்கள் வாபர் பள்ளி வாசலுக்கு சென்று வணங்கி அங்கு தரப்படும் விபூதி பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.
பேட்டைதுள்ளல்:
ஐயப்பன், எருமைத்தலை அரக்கி மகிஷியை கொன்ற தலம் இது. எருமைக்கொல்லி எனப்பட்ட இத்தலம், " எருமேலி' என மருவியது. இது மணிகண்டன் மகிஷியை வதம் செய்து அவள் பூதவுடல் மீது நர்த்தனம் செய்ததன் நினைவாக பக்தர்களால் நடத்தப்படும் ஓர் சடங்கு தான் பேட்டை துள்ளல் எனப்படுகிறது. உடல் மீது வண்ணப்பொடிகளை பூசிக் கொண்டு, இலை, தழைகளை கட்டிக் கொண்டு மரத்தினாலான சரக்கோலுடன் மேளதாளத்துடன் சுவாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என ஆடிப்பாடிக் கொண்டு வாபர் சன்னதியை வலம்வந்து பின் பேட்டை சாஸ்தா கோயிலிலிருந்து தர்மசாஸ்தாவின் சன்னதி வந்தடைந்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டு பெருவழிப்பாதையாத்திரையை தொடர வேண்டும்.
பேரூர்தோடு:
பெருவழிப்பாதையில் முதலில் வரும் இடம் பேரூர்த்தோடு. இது ஓர் சிறிய ஆறு ஆகும். எருமேலியிலிருந்து சுமார் 2 மைல் கிழக்கே இருக்கிறது. பக்தர்கள் இந்த ஆற்றில் நீராடி, சிறிது இளைப்பாறி சுவாமியை வழிபட்டுத் தங்கள் பயணத்தை தொடரலாம்.
Leave a Comment