வேல் என்றால் வழிபாட்டுப் பொருள்


கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். 

சூரனை வதம் செய்ய முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர். சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். 

அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்.
 



Leave a Comment