சபரிமலைக்கு செல்ல முடியவில்லையா? வீட்டில் இருந்தே ஐயப்பன் பிரசாதம் பெறலாம்...


சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்களுக்காக தபாலில் ஐயப்பன் கோவில் பிரசாதம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் இதற்கு முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரசாதம் பெற பக்தர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் பணத்தைக் கட்டினால் அவர்களுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் பிரசாதம் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நவம்பர் மாதத்தில் மண்டலக் கால பூஜைகள் நடைபெறும். இதையொட்டி 41 நாட்கள் தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இதன்பின்னர் மகர விளக்குப் பூஜைகள் தொடங்கும். இந்த சமயத்தில் 21 நாட்கள் நடை திறந்திருக்கும். சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் தான் அதிகளவில் பக்தர்கள் செல்வார்கள். 

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்படத் தென் மாநிலங்களில் இருந்து தான் சபரிமலைக்கு அதிகளவில் பக்தர்கள் செல்கின்றனர்.ஆனால் இவ்வருடம் கொரோனா பரவல் காரணமாகச் சபரிமலையில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மண்டலக் காலத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1000 பக்தர்களையும், சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் 2,000 பக்தர்களையும் மட்டுமே அனுமதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதுவும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே இவ்வருடம் அனுமதி உண்டு. பக்தர்கள் தரிசனத்திற்குச் செல்லும் போது 24 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழையும் கொண்டு செல்ல வேண்டும். வழக்கமாக மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் சபரிமலைக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் செல்வார்கள். ஆனால் இவ்வருடம் கொரோனா பரவல் காரணமாக வழக்கம் போலப் பக்தர்களால் சபரிமலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து பக்தர்கள் வசதிக்காகப் பிரசாதங்களைத் தபாலில் அனுப்பும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டும், தபால் துறையும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதன்படி பக்தர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் மின்னணு முறையில் பணம் செலுத்தினால் 3 நாளில் ஸ்பீட் போஸ்ட் மூலம் வீட்டுக்கே பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். அதில் அரவணை, நெய் குங்குமம், மஞ்சள், விபூதி, அர்ச்சனை பிரசாதம் ஆகியவை இருக்கும். இதற்கான கட்டணம் 450 ரூபாய் ஆகும். இன்று முதல் எல்லா தபால் அலுவலகங்களிலும் முன்பதிவு செய்யலாம். மண்டல கால பூஜைகள் தொடங்கும் 16ம் தேதி முதல் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். இந்த திட்டத்தைக் கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் திருவனந்தபுரத்தில் தொடங்கி வைத்தார். 



Leave a Comment