நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது....
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 11-ந்தேதி நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஐப்பசி திருவிழா. கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் ஐப்பசி திருவிழா தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. திருவிழாவை வழக்கம்போல் இந்த ஆண்டு நடத்த வேண்டுமென நெல்லை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி ஐப்பசி திருவிழாவை இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அனைத்து பூஜைகளும் கோவில் உள்பிரகாரத்தில் நடைபெறும். வருகிற 11-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்படும். வழக்கமாக தபசு காட்சி, காட்சி மண்டபத்தில் நடைபெறும். இந்த ஆண்டு தபசு காட்சியை காட்சி மண்டபத்தில் வைத்து நடத்துவதா? அல்லது கோவில் உள்பிரகாரத்தில் நடத்துவதா? என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிப்போம். திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் நடைபெறும் அபிஷேகம், ஆராதனை மற்றும் கோவில் வளாகத்திற்குள் வைத்து நடைபெற உள்ள சுவாமி, அம்பாள் புறப்பாடு ஆகியவற்றையும், அம்மன் தபசுக்காட்சி, திருக்கல்யாண காட்சி ஆகியவற்றையும் யூடியூப்பில் பார்த்துக் கொள்ளலாம்.
Leave a Comment