பாவங்களை போக்கும் அன்னாபிஷேக தரிசனம்....
ஐப்பசி மாத பவுர்ணமியில் சிவாலயங்களில் உள்ள லிங்கத்திருமேனிக்கு அன்னத்தால் அபிசேகம் செய்யப்படுகிறது.
உலகில் வாழும் உயிரினங்களுக்கு எல்லாம் உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி கூறும் விதமாகவே ஐப்பசி பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம். இதைத்தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று கூறியுள்ளனர்.
தானங்களில் போதும் என்ற மனதிருப்தியை தருவது அன்னதானம் மட்டுமே. எனவே மனதுக்கு திருப்தி அளிப்பதும், உடல் இயக்கத்திற்கு காரணமானதுமான அன்னத்தை உலகுக்கெல்லாம் உணவளிக்கும் சிவபெருமானுக்கு ஐப்பசி பவுர்ணமியில் அபிசேகம் செய்து நன்றி தெரிவிக்கப்படுகிறது.
சமைத்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்து காய்கறிகள்,பழங்களைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபடுகின்றனர். அன்னாபிஷேக நாளில் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அந்த அன்னமே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிடுபவர்களுக்கு உணவு பஞ்சமே ஏற்படாது என்பது நம்பிக்கை. இந்த நாளில் சிவபெருமானை தரிசிக்க அன்னாபிஷேகமும், அன்னதுவேஷமும் நீங்கும்.
வடித்த அன்னத்தை லிங்கம் முழுவதும் பூசி வழிபாடு நடத்தப்படுகிறது. வழிபாட்டின் முடிவில் சிவலிங்கத்தின் பாண பகுதியில் இருக்கும் அன்னமானது தனியே எடுக்கப்பட்டு நீர்நிலைகளில் கரைத்து விடப்படுகிறது.
ஆவுடைப்பகுதியில் இருக்கும் அன்னமானது தயிருடன் கலந்தோ, அல்லது தனியாகவோ அன்னதான உணவில் கலக்கப்படுகிறது.
அன்னாபிஷேகத்தைத் தரிசனம் செய்தால் நம்முடைய பாவங்கள் விலகும். புண்ணியம் கிட்டும். தாராள உணவு கிடைக்கும் பசிப்பிணி வராது என்று கருதப்படுகிறது. அன்னாபிஷேகம் எல்லா சிவாலயங்களிலும் உச்சிக்காலம் மற்றும் சாயாரட்சை காலங்களில் சிறப்பாக நடத்தப்படுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் விளக்கேற்றி வழிபட உணவு தானியங்கள் பெருகி பசிப்பிணி ஏற்படாது.
Leave a Comment