கிரஹங்களின் தன்மைக்கு ஏற்ற ஹோரை.... ரகசியங்கள்.... 


ஹோரை என்பது ஒரு மணி நேரத்தினைக் குறிக்கும். ஒரு நாளின் சூரிய உதய காலத்தில் இருந்து முதல் ஒரு மணி நேரம் அந்தக் கிழமைக்கு உரிய கிரகத்தைச் சேரும். அதாவது பொதுவாக சூரிய உதயம் காலை ஆறு மணி என்று வைத்துக் கொள்வோம். அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை என்றால் காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலான முதல் ஒரு மணி நேரம் சூரிய ஹோரை ஆகும். 

ஒன்பது கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு - கேதுக்களைத் தவிர மற்ற ஏழு கிரஹங்களின் பெயர்களைத்தான் நாம் வார நாட்களுக்கும் சூட்டியுள்ளோம். இந்த ஏழு கிரஹங்களும் தான் ஹோரையிலும் இடம்பிடிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை என்று வைத்துக்கொண்டால் சூரிய உதயத்தில் இருந்து முதல் ஒரு மணி நேரம் சூரிய ஹோரை அதனைத் தொடர்ந்து சுக்கிர ஹோரை, புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்ற வரிசையில் வந்து மீண்டும் சூரிய ஹோரை, சுகிக்ரன் என்ற சுழற்சியில் வந்து கொண்டிருக்கும். திங்கட்கிழமை என்றால் சந்திர ஹோரையில் நாள் துவங்கும்.

இதே போலவே ஒவ்வொரு நாளும் தனது கிழமையின் பெயரில் உள்ள கிரஹம் எதுவோ அதனுடைய ஹோரையில் துவங்கும். சூரிய உதய நேரத்திற்குத் தகுந்தாற்போல் ஹோரை துவங்கும் கால நேரத்தில் மாறுபாடு இருக்கும். உதாரணத்திற்கு தை மாதத்தில், தஞ்சாவூர் சூரிய உதயம் காலை 06.40 மணி என்று வைத்துக்கொண்டால் அந்த ஞாயிற்றுக்கிழமை நாளில் காலை 06.40 மணி முதல் 07.40 மணி வரை சூரிய ஹோரை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். 

இவற்றில் பொதுவாக குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய ஹோரைகள் சுப ஹோரைகள் என்றும், சூரியன், செவ்வாய், சனி ஆகிய ஹோரைகள் அசுப ஹோரைகள் என்றும் சொல்வார்கள். சுப ஹோரைகளில்தான் சுபநிகழ்ச்சிகளைச் செய்ய வேண்டும் என்பது ஒரு சிலரின் கருத்து. அசுப ஹோரைகள் என்று அழைக்கப்பட்டாலும் சூரிய ஹோரையும், செவ்வாய் ஹோரையும் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு மிகவும் உகந்தது. சமையல், கேட்டரிங், ஹோட்டல் தொழில் செய்பவர்களுக்கு சனி ஹோரை மிகவும் நற்பலனைத் தரும் இவ்வாறு கிரஹங்களின் தன்மைக்கு ஏற்றவாறு ஹோரைக்கான பலன்களை அனுபவிக்க இயலும்.
 



Leave a Comment