சிறிய ஆணி முதல் பெரிய இயந்திரம் வரை, இறைபொருளாகும் ஆயுத பூஜை
நவராத்திரியின் ஏழாம் நாளன்று நான்முகன் நாயகி கலைவாணி ,நாதஸ்வரூபமாக எழுந்தருளி நமக்கு ஞானத்தை தந்தருளுகிறாள். நவராத்திரியின் ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது,சரஸ்வதி தேவியை முறையாக ஆவாகனம் செய்ய வேண்டும். கல்வியின் தெய்வமான சரஸ்வதி ஒரு ஞான சக்தி.
அதற்கு அடுத்து வரும் எட்டாவது நாளில் வாழ்க்கையில் எட்டாத பல செயல்களையும் செய்யும் திறனை நமக்கு அருளி, நமக்கு ஏற்றத்தை அளிக்கிறாள். பண்டிகையின் ஒன்பதாவது நாளில் அழியாத கல்வி செல்வத்தை அருளுகிறாள். கற்ற வித்தை என்றும் நிலையானது என்பதை நமக்கு உணர்த்துகிறாள் தேவி சரஸ்வதி.
நவராத்திரியின் பத்தாவது நாள் விஜயதசமி. விஜயம் என்றாலே வெற்றி.தீமைகளில் இருந்து நன்மையை காப்பாற்றி அருளும், விஜயதசமி அன்று தொடங்கும் எந்த ஒரு காரியமும் வெற்றி பெறும் என்பதே விஜயதசமி கொண்டாடப்படுவதற்கான நோக்கம். நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கல்வி, தொழில் செழிக்கவும், குழந்தைகளின் கல்வி சிறந்து விளங்கவும் சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும். சரஸ்வதி பூஜையன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு வழிபாடு செய்வதற்கு முன்பு, வழிபாடு செய்யவிருக்கும் இடத்தை தூய்மைப்படுத்த வேண்டும். மூலப் பரம்பொருளான விநாயகரை மனதில் நினைத்து, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதனை சரஸ்வதி பூஜையில் வைப்பதுடன், விநாயகரை வணங்கிய பின்னரே, சரஸ்வதிக்கான பூஜையை தொடங்க வேண்டும். சரஸ்வதி பூஜையின் போது 'துர்கா லட்சுமி சரஸ் வதீப்யோ நம' என்று கூறி பூஜையை தொடங்க அனைத்தும் நன்மையில் முடியும்.
கல்விக்கு அதிபதியான சரஸ்வதி அன்னையின் முன்பு, புத்தகங்களை வைத்து சந்தான பொட்டிட வேண்டும். வாழை இலை விரித்து அதில் சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை சரஸ்வதி தேவிக்கு நிவேதனமாக படைக்கலாம். கூடவே அவல், பொரி, கடலை மற்றும் பழங்களும் வைக்க வேண்டும். கலைமகளுக்கு உகந்த செம்பருத்தி, ரோஜா, வெண் தாமரை போன்ற மலர்களை அன்னைக்கு அணிவிக்கலாம்.
நவராத்திரி ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜை செய்ய இயலாதவர்கள், சரஸ்வதி பூஜை அன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினாலே மூன்று தேவியரின் அருளைப் பெற முடியும். அன்று நாம் செய்யும் ஆயுத பூஜை வழிபாடும் வாழ்வில் நம் உயர்வுக்கு பெரிதும் உதவும். ஆயுத பூஜையன்று சிறிய ஆணி முதல் பெரிய இயந்திரங்கள் வரை, இறைபொருளாகப் பாவித்து ,கழுவி சுத்தமாகத் துடைத்து,பொட்டிட்டு, பூ வைத்து,பூஜைகள் செய்வது சிறப்பம்சமாகும்.
Leave a Comment