நவராத்திரி பூஜையில் ஐஸ்வர்யம் தரும் காவி கோலம்....
ராமாவதாரத்தில்,வனவாசத்தின் போது, சீதையை ராவணன் கவர்ந்து செல்ல தேடி ராமரும் அவரின் சேனைகளும் அன்னையை நாலாபுறம் தேடிக் கொண்டிருந்தனர். இந்த அவதாரத்தின் நோக்கம் ராவணனை வதம் செய்வதே என்றும் அதனை நிறைவேற்ற அன்னை பகவதி தேவியின் அருள் வேண்டி நவாரத்திரி விரதம் அனுஷ்டித்தால் நல்ல பலன் உண்டு என்றும் சொல்கிறார் நாரத மாமுனி.
நாரதரின் ஆலோசனைப்படி ,மிகவும் சிரத்தையுடன் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தார் ராமர். அஷ்டமி அன்று இரவில் ராமருக்கு,அம்பிகை சிம்ம வாஹினியாக காட்சிதந்து அருளினார். அதோடு, ஸ்ரீ ராமரின், முந்தைய அவதாரங்களான, மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம அவதாரங்களை அவருக்கு நினைவுபடுத்தி, ' தேவர்களின் அம்சங்களை உடைய வானரர்கள் உனக்குத் துணை செய்வார்கள். ஆதிசேஷனின் அம்சமான, உன் சகோதரன் லக்ஷ்மணன் இந்திரஜித்தை வதம் செய்வான். இராவணன் உன்னால் கொல்லப்படுவான் என்று அருளினாள்.
இத்தகைய மகத்துவம் வாய்ந்த நவரத்திரி விரதம் இருந்து பலன் பெற்றவர்கள் எண்ணிலடங்காதது.திரிபுரர்களைச் சம்ஹாரம் செய்ய சிவ பெருமான் இந்த விரதத்தை கடைப்பிடித்ததாக புராணம் கூறுகிறது. மேலும் விருத்திராசுரனைக் கொல்வதற்காக, இந்திரனும், மதுராவை சம்ஹாரம் செய்வதற்காக, நாராயணனும், இந்த விரதத்தை அனுஷ்டித்தனர். சப்த ரிஷிகளும், இந்த விரதத்தை அனுஷ்டித்துப் பலன் அடைந்திருக்கின்றனர்.
நவராத்திரி நாட்களில் கொலுவீற்றிருக்கும் அம்பிகையின் முன் சுண்ணாம்பு மாவினால் ஆன கோலம் போடக்கூடாது.அதற்கு பதில் அரிசி மாவைப் பயன்படுத்த வேண்டும். இதனால் குடும்ப ஒற்றுமையையும் செல்வமும் பெருகும். நவராத்திரி கோலத்தை சுற்றி காவியால் கோடிட்டு போட்டால் ஐஸ்வர்யம் பெருகும்.
நவராத்திரி காலங்களில் காலையில் செய்யப்படும் பூஜை சிவனுக்கும், மாலை இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாட்டுக்கு உகந்தது. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்து துவங்க வேண்டும். நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை உச்சரித்தால் அம்பிகையோடு அய்யனின் அருளும் கிடைக்கும். . நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று விரதமிருந்து வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். சப்தமி திதியில், ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் கூறுவது மென்மேலும் பலன்களைத் தரும். விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் நிறைவாகும்.
Leave a Comment