புகழ்பெற்ற பத்து முருக தலங்கள் 


திருப்பரங்குன்றம்...
மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் முதல் வீடாகும். இத்தலத்தில் முருகனின் வேலுக்கு கூட சிறப்பு அபிஷேகம் நடப்பது சிறப்பு. அசுரனை வென்ற முருகன் இந்தத் தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். 

சோலைமலை....
மதுரை மாவட்டத்தில் சோலைமலையில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஆறாவது படைவீடாகும். சாதாரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம். 

திருத்தணி....
திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார். கோபம் தணித்த இடம் என்பதால் தணிகை என இத்தலம் பெயர் பெற்றதாக வரலாறு. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் முருகனின் ஐந்தாம் படைவீடாகும். முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை பக்தர்கள் நீரில் கரைத்து குடிப்பதால் நோய் நீங்கும். 

பழனி....
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருக தலம் அறுபடை வீடுகளில் மூன்றாவதாகும். இக்கோவில் மிகவும் புராதனமான கோவிலாகவும் உள்ளது. குன்றின் மீது அமைந்துள்ள இத்தல முருகன் தண்டாயுதபாணி சுவாமி என்ற திருநாமத்துடன் வணங்கப்படுகிறார். பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, அக்னி நட்சத்திரம் ஆகிய விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. 

திருச்செந்தூர்....
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள முருக தலம் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடாகும். இத்தல முருகன் சன்னதியின் மேற்கு திசையில் உள்ள ராஜகோபுரத்தின் உள்ளே மூலவர் கடலை நோக்கியபடி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது

குன்றத்தூர்.... 
குன்றத்தூர் முருகன் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் அமைந்துள்ளது.  இந்தத் திருத்தலத்தில் மூலவராக வீற்றிருப்பவருக்கு சுப்பிரமணியர் என்ற திருநாமத்துடன் வள்ளி, தெய்வானை சமேதராக அருள்புரிகிறார். கருவறை சன்னிதி முன்புள்ள துவாரபாலகர்களுக்கு வஜ்ரம், சூலாயுதம் என்று முருகனுக்கு உரிய ஆயுதங்கள் இருக்கின்றன. 

மருதமலை.... 
கோயம்புத்தூரில் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றலாத் தலங்களில் ஒன்றாக உள்ள மருதமலை முருகன் கோவிலில் முருகன் சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி, மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். மருதமலையின் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் என்ற ஒரு சிறிய விநாயகர் கோவிலும் உள்ளது. கோம்புத்தூருக்கு பயணிக்கும் யாவரும் தவறவிடக்கூடாத சுற்றுலாத்தமாக இது திகழ்கிறது. 

வடபழனி.... 
அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவில் சென்னையில் உள்ள வடபழனியில் அமைந்துள்ளது. திருமணத் தடை விலகவும், குழந்தைப்பேறு பெறவும் இத்தல முருகனை வழபடுகின்றனர். தென்பழநிக்கு செல்ல முடியாதவர்கள் வடபழநிக்கு வந்து தங்கள் குறைகளை சொல்லியும் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றியும் செல்கின்றனர். அவர்களுக்கு கலியுக வரதனான வடபழநி ஆண்டவர் அருள்பாலிப்பது திண்ணம்.

எட்டுக்குடி.... 
திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே உள்ளது எட்டுக்குடி முருகன் கோவில். அறுபடை வீடு முருகன் கோவில்கள் தவிர புகழ் பெற்ற முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஒன்று. மிகப் பழமையான கோவில்களில் ஒன்றான இங்கு முருகன் வள்ளி தெய்வானை சகிதம் காட்சி தருகிறார். முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே. இந்த கோவிலில் முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள் தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள். 

சுவாமிமலை....
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுவாமிமலையில் உள்ளது. இது நான்காம் படைவீடாகும். சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். தன் பிள்ளையின் வாயால் பிரணவ மந்திரத்தின் பொருளை கேட்டு மகிழ்ந்தார் சிவன். அதுவும் தன் பிள்ளை குருவாக வீற்றிருக்க, தானே சீடனைப் போல் அமர்ந்து கேட்டார். அதனால் சிவ குருநாதன் என்ற பெயரையும் இத்தல முருகப்பெருமான் பெற்றார்.
 



Leave a Comment