இறை பக்தியை உணர்த்திய ஸ்ரீ ராகவேந்திரர் செய்த அற்புதம்
ஆன்மிக பயணம் மேற்கொண்டிருந்த ராகவேந்திரர், ஒருமுறை மாளவி என்ற ஊரில் உள்ள கோவிலில் தங்கியிருந்தார். ஒரு நாள் மூல ராமருக்கான பூஜைகளை முடித்து விட்டு ஓய்வாக அமர்ந்திருந்தார். ஓய்வு நேரத்தில் ராகவேந்திரருக்கு நூல் எழுதும் பழக்கம் இருந்தது. அதற்கான பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த ஊரைச் சேர்ந்த ஒரு வாலிபன், கோவிலுக்கு வெளியே நின்றபடி ராகவேந்திரரையும், அவரது பணிகளையும் கவனித்தபடி நின்றிருந்தான். இதைப் பார்த்த ராகவேந்திரர், அந்த வாலிபனை உள்ளே வரும்படி அழைத்தார்.
அவனோ, ‘நான் தாழ்ந்த குடியைச் சேர்ந்தவன். ஆகையால் எனக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி கிடையாது’ என்று கூறினான்.
‘இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களில் உயர்வு– தாழ்வு என்பது கிடையாது. நம்மை படைத்த கடவுளின் சன்னிதிக்கு வருவதற்கு, எவரது அனுமதியும் நமக்குத் தேவையில்லை. ஆகவே நீ தாராளமாக கோவிலுக்குள் வரலாம்’ என்றார் ராகவேந்திரர்.
இதையடுத்து கோவிலுக்குள் வந்து, தன் காலில் விழுந்து தொழுத அந்த இளைஞனை, தூக்கி நிறுத்தி தழுவிக் கொண்டார் ராகவேந்திரர். பிறகு, ‘நான் இங்கு இருக்கும் காலம் வரை மூலராமருக்கு நடத்தப்படும் பூஜைக்கு, உன்னால் முடிந்த பொருட்கள் ஏதாவது கொண்டுவா!’ என்று கூறினார்.
‘ஏழையான நம்மால் என்ன தர முடியும்?’ என்று யோசித்தவாறே அந்த இளைஞன் வீட்டிற்கு சென்றான். தன் வீட்டில் சிறிதளவு இருந்த கடுகைக் கொண்டு போய் ராகவேந்திரரிடம் சமர்ப்பித்தான். அதனை பெற்றுக்கொண்ட அவர், தன் சீடர்களை அழைத்து, அன்றைய உணவில் இந்த கடுகை சேர்க்கும்படி கூறினார்.
கடுகைப் பெற்றுக்கொண்ட சீடர்களுக்கு தயக்கம் ஏற்பட்டது. ஏனெனில் விரத மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த அந்த மாதத்தில் உணவில் கடுகை சேர்க்கக் கூடாது என்ற ஆசார விதி இருந்தது. அதற்காகவே சீடர்கள் தயக்கம் காட்டினர். அதனை ராகவேந்திரரிடமும் தெரிவித்தனர்.
ஆனால் ராகவேந்திரர் கூறிய பதில் சீடர்களின் தயக்கத்தை விரட்டியது. ‘உண்மையான பக்தியுடன் சமர்ப்பிக்கப்படும் எந்த பொருளையும் இறைவன் மறுப்பதில்லை’ என்பதே அந்த பதில். அதன்பின்னர் சீடர்கள், சமையலில் கடுகை சேர்த்து உணவு சமைத்தனர்.
இந்த நிலையில் ராகவேந்திரரை பார்ப்பதற்காக புலவர் ஒருவர் வந்திருந்தார். அவரை வரவேற்று, அவரது புலமையை பாராட்டிய ராகவேந்திரர், தன்னுடன் உணவருந்தும்படி கேட்டுக் கொண்டார்.
அந்த புலவரும் உணவருந்த அமர்ந்தார். அப்போது பரிமாறப்பட்ட உணவில் கடுகு சேர்க்கப்பட்டிருப்பது கண்டு அவர் முகம் சுளித்தார். ‘ஆஷாட மாதமான விரத காலத்தில் கடுகை உணவில் சேர்ப்பது ஆசாரத்திற்கு எதிரானதே’ என்று நினைத்தவர், அதனை ராகவேந்திரரிடம் கூறி குறைபட்டுக் கொண்டார்.
‘இதற்காகவா கவலைப்படுகிறீர்கள்! உங்களுக்கு கடுகு சேர்க்காத உணவு தரச் சொல்கிறேன்’ என்று கூறி, புலவருக்கு வேறு உணவை அளிக்கச் செய்தார் ராகவேந்திரர். ஆனால் ராகவேந்திரர், கடுகு சேர்க்கப்பட்ட உணவையே உட்கொண்டார். இது புலவருக்கு பெரும் வருத்தத்தை உண்டாக்கியது. உணவு உபசரிப்பு முடிந்து புலவர் ஊருக்கு புறப்படும்போது, அவருக்கு மந்திர அட்சதையை கொடுத்து அனுப்பினார் ராகவேந்திரர்.
வீட்டிற்கு சென்றதும் அதனை திறந்து பார்த்த புலவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். ஏனெனில் ராகவேந்திரர் வழங்கும்போது பொன்னிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த அட்சதையானது, கருமையாக மாறியிருந்தது.
மறுகணமே புலவர் புறப்பட்டு விட்டார் ராகவேந்திரரை தேடி. அவரது காலில் விழுந்து கதறி அழுதார்.
‘இறைவனுக்கு படைக்கப்பட்ட உணவை நீ மனவெறுப்புடன் உண்ண மறுத்து விட்டாய். அதனால் ஏற்பட்ட விளைவு இது. கடவுள் மீது வைக்கும் நம்பிக்கை முழுமையானதாக இருக்க வேண்டும். அது அரைகுறையாக இருக்கக் கூடாது. மேலும் இறைவனுக்கு ஆசாரத்தை காட்டிலும், பக்தனின் அளவு கடந்த பக்தியே பிரதானம்’ என்றார் ராகவேந்திரர்.
Leave a Comment