குழந்தை பாக்கியம் அருளும் காஞ்சி உலகளந்த பெருமாள்!


காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் அருகே அமைந்துள்ளது உலகளந்த பெருமாள் கோயில். உலகை அளந்தவர் என்னும் பெயர் பெற்ற பெருமாள்தான் உலகளந்த பெருமாளாக அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தை பற்றி அறியும் முன் திருவிக்ரமனாக பெருமாள் எடுத்த அவதாரத்தை சற்று பார்ப்போம். மகாபலிச் சக்ரவர்த்தியின் ஆட்சிக்காலம் பொன்னானது. தர்மத்தின் வழி நடந்து வந்தவன். மகாவிஷ்ணுவும் தர்ம நியாயம் தவறாதவர். அவர் எவ்வாறு தர்மத்தின் வழி நடந்து வந்த மகாபலியை வதைப்பது என்று தீவிரமாக யோசித்து, அவனது வாழ்க்கையில் தர்மநியதி வழுவி நடந்துகொண்ட நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார்.

நல்ல குணங்கள் பல நிறைந்திருந்தும், மகாபலிச் சக்கரவர்த்தி அவனுடன் கூட இருந்தவர்களின் தூண்டுதலால் தேவேந்திரனின் இந்திரலோகத்தை தன் வசம் எடுத்து கொண்டான்.நூறு அஸ்வமேத யாகங்களை செய்தவனே, இந்திர பதவியை அடையலாம் என்பது நியதி. மகாபலிச் சக்கரவர்த்தியோ அஸ்வமேதயாகங்களை செய்யாமல் இந்திர லோகத்தை தன் வலிமையால் கைப்பற்றியிருந்தான். எனவே அவன் நீதி தவறி இருக்கிறான் என்பது நினைவுக்கு வந்தது.

அவனை வதைத்து இந்திரலோகத்தை இந்திரனுக்கு மீட்டுத் தர காஸ்யபர், அதிதி தம்பதியினரின் மகனாக விஷ்ணு பிறந்தார். அவர்கள் அவனுக்கு வாமனன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். மகாபலிச் சக்கரவர்த்தி யாகம் ஒன்றை செய்வதை கேள்விப்பட்டு. மகாவிஷ்ணு தான் தனிமையாக ஓர் இடத்தில் தவம் செய்ய விரும்புவதாகவும் அதனால் தனக்கு மூன்றடி இடம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.அதன்படி வாமனரின் கைகளில் தாரை வார்த்துக் கொடுத்த மகாபலிச் சக்கரவர்த்தி, மூன்றடி இடத்தை அவரது காலால் அளந்து எடுத்துக்கொள்ளச் சொன்னார்.வாமனனாக இருந்த மகாவிஷ்ணு, விஸ்வரூபம் எடுத்து திரிவிக்ரமனாக மாறி பூமியை ஒரு அடியாகவும், வானுலகத்தை ஒரு அடியாகவும் அளந்து, இன்னொரு அடிக்காக மகாபலிச் சக்கரவர்த்தி சிரத்தில் தன் திருவடியை வைத்து அவனை பாதாளத்தில் கீழ் அழுத்தினார் என்பது புராண வரலாறு.

அதன்படி இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமாள் உலகளந்த நிலையில் காட்சி தருகிறார். கருவறை மிகவும் இருட்டாக இருப்தால், அங்கு அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் காட்டும் தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் திருவிக்ரமனாகத் திகழும் திருமாலை காண முடியும். மேலும் சர்ப்பதோஷம் உள்ளவர்களும் குழந்தை இல்லாதவர்களும் இந்த சன்னிதியில் உள்ள  ஆதிசேஷனை வணங்கி பூஜித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் அனைத்து வித தோஷங்களையும் நீக்கி மன வலிமைத் தருபவராக இத்தல பெருமாள் போற்றப்படுகிறார்.
 



Leave a Comment