திருப்பதி திருக்குடைகள் ஒப்படைக்கப்பட்ட அற்புதமான காட்சி....


இந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருப்பதி திருக்குடைகள் பத்மாவதி தாயார்  கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பதி திருமலை ஏழுமலையானுக்கு படைக்கப்படும் அஷ்ட மங்கல பொருட்களில் திருக்குடையும் ஒன்று. ஆதிசேஷனின் அம்சமே திருக்குடைகள். உணவு உற்பத்திக்குத் தேவையான மழையை, போதிய அளவுக்கு தரும்படி இறைவனிடம் வேண்டி, வேங்கடமுடையானுக்கு வெண்பட்டு திருக்குடைகளை காணிக்கையாக வழங்கும் சம்பிரதாயம் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் இருந்து வருகிறது. 

இந்து தர்மார்த்த சமிதி சார்பில், புதிய வெண் பட்டுக்குடைகள் ஆண்டுதோறும் சென்னையிலிருந்து பாதயாத்திரையாக எடுத்து சென்று பிரம்மோற்சவத்தின்போது ஏழுமலையான் கோவிலில் சமர்ப்பிக்கப்படுகிறது. 

சென்னையில் இருந்து திருப்பதி வரை வழிநெடுக லட்சக்கணக்கான மக்கள் திருக்குடைகளுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டு திருப்பதிக்கு நேரில் சென்று பெருமாளை தரிசனம் செய்து போன்று திருகுடைகளை வழிபட்டு செல்வர். ஆனால் இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சென்னையில் இருந்து ஊர்வலமாக வருவது ரத்து செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மட்டும் மேற்கொண்டு திருப்பதிக்கு  11 வெண்பட்டு குடைகள் கொண்டு வரப்பட்டது. 

இதில் திருச்சானுர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு இன்று 2 திருக்குடைகளை   கோவில் துணை செயல் அலுவலர் ஜான்சி ராணியிடம் இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வழங்கினார்.நாளை  திருமலையில் உள்ள ஜீயர் மடத்தில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு 9 வெண்பட்டு குடைகள், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோயில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.



Leave a Comment