செல்வம் அருளும் அட்சய திருதியை
சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை, 'அட்சய திருதியை' எனப்படுகிறது. 'அட்சயம்' என்றால் வளர்வது என்று பொருள். அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு வளரும். அதனால் அட்சய திருதியை அள்ள, அள்ள குறையாமல் செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க திருநாள் என்று போற்றப்படுகிறது.
வனவாச காலத்தில், சூரிய பகவானை வேண்டி தர்மர் அட்சய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அட்சய பாத்திரம் பெற்றதும், பரசுராமர் அவதரித்த தினமும் இதே அட்சய திருதியை தினத்தில்தான் என்று புராணங்கள் எடுத் துரைக்கின்றன. அன்னபூரணி தாயாரிடம் இருந்து சிவபெருமான் தனது பிச்சைப்பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்று, பிரம்மஹஸ்தி தோஷத்தில் இருந்து விடுபட்டதும் இந்த நாளில் தான். தங்கம் மட்டுமின்றி உப்பு, அரிசி, ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். மேலும் அன்று புதிதாக தொழில் தொடங்குவதும், பூமிபூஜை செய்வதும் நல்ல பலனைத் தரும். அட்சய திருதியை அன்று ஏழைகளுக்கு தானம் செய்தால், அது பல மடங்கு புண்ணியத்தை தரும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையுமாம். அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமைநீங்கி வளமான வாழ்வு அமையும்.
Leave a Comment