திருச்சி மலைக்கோட்டை கோவிலில் சித்திரை தேர் ....
சிறப்பு மிகுந்த மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை தேர் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. அதற்காக வருகிற 29-ந்தேதி மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், வாஸ்து பூஜையும் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து 30-ந்தேதி காலை மிதுன லக்கனத்தில் தாயுமானசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை தேர் திருவிழா தொடங்குகிறது.
இதில் மே மாதம் 4-ந்தேதி காலை நூற்றுக்கால் மண்டபத்தில் 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் செட்டிப்பெண் மருத்துவம் என்ற ஐதீக நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் சுகபிரசவ மருந்து, பீஜாதானம் பக்தர்களுக்கு வழங்கப்படும். குழந்தை தொட்டிலில் இடும்விழா காலை விழாவாகவும், மாலை விழா அறுபத்து மூவர் முதலான பக்தகோடிகள் சூழ ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி ரத்தினாவதி அம்மையாருக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி தெரு அடைச்சான் விழாவாக நடைபெற உள்ளது. இதில் 6-ம் நாளான 5-ந்தேதி காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் சுவாமி அம்பாளுக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக அம்மன் காலையில் நந்தவன திருக்குளத்தில் எழுந்தருளி தவசு பூஜை செய்தல், திருக்கல்யாண உற்சவத்தில் மாலை மாற்றுதல் வைபவம் ஆகியவையும் நடைபெறும். பிறகு நூற்றுக்கால் மண்டபத்தில் காலை 11 மணிக்கு திரு நாண் பூட்டுதல் திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம், சந்தனம், கற்கண்டு, தாலிசரடு ஆகியவை சுமங்கலி பெண்களுக்கு வழங்கப்படும். இதில் 9-ம் நாளான 8-ந்தேதி காலை 6 மணிக்கு சாமி புறப்பாடு செய்யப்பட்டு தேர் நிலைக்கு விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் ஒரு தேரிலும், சுவாமி அம்பாள் சோமாஸ் கந்தராக சுவாமி தேரிலும், அம்பாள் தனியாக அம்மன் தேரிலும் காலை 6 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.
Leave a Comment