அதிபத்த நாயனார் சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கிய கதை
63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் நாகப்பட்டினத்தை அடுத்துள்ள நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் பிறந்த மீனவர் ஆவார். அக்காலத்தில் நுளைப் பாடி என்றழைக்கப்பட்ட நம்பியார் நகரில் பெரிய செல்வந்தரான இவர் படகில் சென்று மீன் பிடித்து வரும் போது விலைமதிப்புள்ள மீனை இறைவன் சிவபெருமான் படைத்து வந்தார் .
அந்த மீனை திரும்பவும் இறைவனை வேண்டி கடலிலேயே விட்டு விடுவது அவரது வழக்கம். இதனால் நாளடைவில் அவர் செல்வத்தை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போதும் தனது நிலையிலிருந்து அவர் மாறவில்லை. அவரது பக்தியை சோதனை செய்ய நினைத்த இறைவன் சிவபெருமான் அவரது வலையில் வெள்ளி மீன் ஒன்றை கிடைக்கச் செய்தார் .
மிகுந்த வறுமையில் இருந்தாலும் அந்த மீனையும் இறைவன் சிவபெருமானை வேண்டி அம்மீனை கடலில் விட்டு விட்டார். மறுநாள் அவருக்கு மீன்கள் ஏதும் அகப்படாத நிலையில் அவரது வலையில் வைரமும் ,வைடூரியமும், மாணிக்கக் கற்களும் பதிக்கப்பட்ட விலைமதிப்பற்ற ஒரே ஒரு மீன் மட்டும் அதிபத்த நாயனாருக்கு கிடைத்தது .
ஆனால் தன்னுடைய வறுமையான நிலையிலும் தனக்குக் கிடைத்த ஒரே ஒரு விலைமதிப்பற்ற மீனையும் இறைவனை வேண்டி கடலில் விட்டார். அப்போது இறைவன் சிவபெருமான் பார்வதியுடன் தோன்றி காட்சி அளித்தது அதிபத்த நாயனாருக்கு முத்திப்பேறு அளித்ததாக வரலாறு.
இதனை நினைவு கூறும் விதமாக ஆயில்ய நட்சத்திர தினத்தன்று நாகப்பட்டினத்தில் தங்க மீன் திருவிழா நடத்தப்படுவது வழக்கம் . நடுக்கடலில் நடத்தப்படும் இத்திருவிழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து மீனவர்களும் , சிவனடியார்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கானோர் நாகப்பட்டினம் கடற்கரையில் கூடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தொற்று காரணமாக நாகப்பட்டினத்தில் உள்ள காயாரோகணசாமி நீலாயதாட்சி அம்மன் கோயிலில் எளிமையான முறையில் நடைபெற்றது.
Leave a Comment