திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அழ்வார் திருமஞ்சனம்.... 5 மணி நேரம் தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் 19ஆம் தேதி முதல் 27ம் தேதி வரையும், நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை கோவில் முழுவதும் சுத்தம் செய்யக்கூடிய கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் காலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது.
இதனால் பக்தர்கள் 5 மணி நேரத்துக்கு பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பு ( உகாதி ) , ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்கிழமையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மைப்பணி) நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு 19 ம் தேதி முதல் பிரம்மோற்சவம் நடைபெறுவதையொட்டி நாளை செவ்வாய் கிழமை காலை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதையொட்டி, மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாத, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெறுகிறது.
பின்னர், பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிகட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்படவுள்ளது. கோயில் ஆழ்வார் இதனால் 11 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் குறைந்த அளவு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்று நடத்தப்பட உள்ளது.
ஏழுமலையானுக்கு பிரம்ம தேவனால் நடத்தப்பட்ட உற்சவத்தை பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படுவது வழக்கம். பிரம்மோற்சவம் என்பது ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சுவாமி வீதிஉலா ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவம் நடைபெறும் ஒன்பது நாட்களும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் கொலு வைக்கப்பட உள்ளது.
பக்தர்கள் இல்லாமல் பிரம்மோற்சவம் நடத்தப்படுவது ஏழுமலையான் கோவில் வரலாற்றிலேயே முதல்முறையாக நடத்தப்பட உள்ளது. அக்டோபர் மாதம் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவத்திலாவது பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மத்திய மாநில அரசுகள் கோவில் திருவிழாக்களில் நடத்துவதில் எந்த அளவிற்கு தளர்வு வழங்கப்படுகிறதோ அதனைப் பொறுத்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என தேவஸ்தானம் ஏற்கனவே அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Comment