அறுபடை முருகப்பெருமானை விரைவாக தரிசனம் செய்ய எளிய வழி !  


முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வந்தால் மனதில் அமைதியும், உள்ளத்தில் உவகையும், உடல் ஆரோக்கியமும் கிடைப்பது நிச்சயம். நம் எல்லோருக்கும் அறுபடை வீடுகளுக்கும் ஒரே நேரத்தில் சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.


ஆனால், நேரமின்மை உள்ளிட்ட காரணங்களால் தள்ளி போட்டுக்கொண்டே இருப்போம். சரியாக திட்டமிட்டால் சீக்கிரமாகவும், சிக்கனமாகவும் அறுபடை வீடு முருக பெருமான் கோயில்களில் தரிசித்து வந்துவிடலாம். மூன்றே நாட்களில் அறுபடை வீடுகளுக்கு பெரும்பாலும் பேருந்துகளிலே செல்ல முடியும்.
உங்களுக்கு சிறப்பாகவும், சீக்கிரமாகவும் அறுபடை முருகனை தரிசிக்க வேண்டுமெனில், கார்த்திகை, சஷ்டி போன்ற விசேஷ நாட்களையும், வெள்ளிக்கிழமைகளையும் தவிருங்கள். சாதாரண நாட்களி்ல் ஒவ்வொரு கோயிலிலும் பின்பற்றப்படும் தரிசன நேரம் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆறு கோவில்களிலும் சிறப்பு தரிசன நுழைவுக் கட்டணச்சீட்டு வாங்கினால் முருகப் பெருமான் சன்னிதியிலேயே அமர்ந்து ஆராதனையின் போது வழிபடலாம். சிறப்பு தரிசனத்திற்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கட்டணங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர்
தூத்துக்குடி வந்து அங்கிருந்து பஸ் அல்லது காரில் திருச்செந்தூருக்கு வரலாம். முதலிலேயே இணையதளம் மூலமாக அல்லது தொலைபேசி வாயிலாக தங்கும் அறை பதிவு செய்து விடுவது நேரத்தை மிச்சமாக்கும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு, அங்கு உள்ள நாழி கிணறு மற்றும் வள்ளிகுகையையும் நேரம் இருந்தால் பார்த்துவிடுங்கள். முதல்முறை வருபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாக குறிப்பிடலாம். திருச்செந்தூரில் தரிசனம் முடிநது 12 மணிக்கெல்லாம் கிளம்பி விட வேண்டும். அப்பொழுதுதான் முதல்நாள் மேலும் இரண்டு கோயில்களுக்கு போக முடியும்.


திருப்பரங்குன்றம் மற்றும் பழமுதிர்சோலை

இந்த இரண்டு கோவில்களும் மதுரைக்கு அருகில் இருக்கிறது. திருசெந்தூரிலிரிந்து மதுரைக்குச் செல்ல மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும். மதுரைக்குப் போகும் நேரத்தை பொறுத்து இரண்டில் எந்த கோவிலுக்கு முதலில் போகலாம் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். ஏன் என்றால் பழமுதிர்சோலை மதுரையிலிருந்து 21 கீ. மீ. தொலைவில் உள்ளது. மற்றும் மலை மீது உள்ளதால் கோவிலை ஆறு மணிக்கே நடை சாத்தி விடுவார்கள். அதனால் நான்கு மணிக்கு முன்னரே மதுரைக்கு வந்துவிட்டால் மட்டுமே அங்கு முதலில் செல்லவும்.
காரிலோ அல்லது பெரியார் மற்றும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து போகலாம். மதுரை செல்ல மாலை 4 மணிக்கு மேல் ஆகிவிட்டால் முதலில் திருப்பரங்குன்றம் கோயிலை பார்த்து விடலாம். பஸ்ஸில் 30 நிமிடத்துக்கும் குறைவாகவே ஆகிறது. நேரமிருந்தால் உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில், நாயக்கர்மஹால், மற்றும் கடைகளுக்கும் சென்று வரலாம். முதல் நாள் பழமுதிர்சோலை செல்ல முடியவில்லை என்றால், இரண்டாம் நாள் காலை முதல் கோயிலாக பழமுதிர்சோலை செல்லவும். மூன்று கோயில்கள் செல்ல வேண்டும் என்பதால் 6 மணிக்கே கோயிலை அடைய முயற்சி செய்யுங்கள்.


பழனி கோயில்
மதுரையில் இருந்து பழனிக்கு காரில் போகலாம். பஸ்ஸில் செல்வதாக இருந்தால் திண்டுக்கல் போய் அங்கிருந்து போவது எளிது. அங்கு போய்ச்சேர இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஆகிறது. மலை அடிவாரத்திலிருந்து மேலே கோவிலுக்குச் செல்ல படி, வின்ச் மற்றும் ரோப் கார் இருக்கிறது. ரோப்காரில் 5 நிமிடத்தில் சென்று விடலாம். தரிசனம் முடிந்ததும் சீக்கிரம் கீழே வந்து முடிந்தவரை 1 மணிக்கு முன்பாக பழனியிலிருந்து கிளம்பினால் அன்றே சுவாமிமலை பார்த்து விடலாம்.

சுவாமிமலை
பழனியிலிருந்து திண்டுக்கல், திருச்சி வழியாக தஞ்சாவூர் சென்று அங்கிருந்து கும்பகோணம் செல்லும் பஸ்சில் ஏறினால் சுவாமிமலையை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் சுவாமிமலை இருக்கிறது. ஒரு வேளை தாமதமானால் தஞ்சாவூரிலிருந்து காரில் போவது நல்லது. உங்களுக்கு நேரம் இருந்தால் இன்னும் நிறைய கோயில்களும் கும்பகோணத்தில் பார்ப்பதற்கு இருக்கிறது. கும்பகோணம் பித்தளை பாத்திரங்கள் மற்றும் சுவாமி சிலைகளுக்கு பெயர் பெற்றது.

திருத்தணி
கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு பஸ்ஸில் போய் அங்கிருந்து திருத்தணிக்கு போகலாம். (சென்னைக்கு 6 மணி நேரம் ஆகிறது). சென்னையிலிருந்து திருத்தணிக்கு மின்சார இரயில் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கிறது. காரில் சென்றால் நேராக கோயிலுக்கே சென்று விடலாம். எப்படியும் மதியம் 1 மணிக்குள் தரிசனம் ஆகிவிடும். அன்றே நீங்கள் ஊர் திரும்பிவிடலாம். நேரமிருந்தால் அங்கிருந்து வேலூர் பக்கத்தில் உள்ள தங்க கோயிலுக்கும் சென்று வரலாம்.


அறுபடை வீடு முருகன் கோயில்களுக்கு வசதியை பொறுத்து கார் அல்லது பஸ்சில் செல்லலாம். உங்கள் வசதிக்கேற்ப இதே வழித்தடத்தில் அல்லது திருத்தணியில் ஆரம்பித்து திருச்செந்தூரில் முடியும் வகையில் பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம். ஒரே பயணத்தில் சிக்கனமாவும், சீக்கிரமாகவும் அறுபடை வீடு முருகன் கோயில்களில் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக எனது பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளேன். இது உங்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.
 



Leave a Comment