திருமலையில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி....


திருமலையில் அனந்த பத்மநாப சுவாமி விரதத்தையொட்டி, சக்கரத்தாழ்வாருக்கு  தீர்த்தவாரி நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி தெப்பக்குளத்தில் இல்லாமல் ரங்கநாதர் மண்டபத்தில் பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது. 

திருமலையில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசி அன்று அனந்த பத்மநாப சுவாமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று சதுர்த்தசி திதியையொட்டி, திருமலையில் இவ்விரதம் கடைப்பிடிக்கப்பட்டது. இதற்காக காலையில் ஏழுமலையான் சந்நிதியில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. 

அதன்பின் ஏழுமலையான் காலடியில் வைத்த கங்கணத்தை அர்ச்சகர்கள் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி கையில் கட்டினர். அதன்பின், ஏழுமலையான் கருவறையிலிருந்து சக்கரத்தாழ்வார் கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சக்கரத்தாழ்வாருக்கு தேன், பால், மஞ்சள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு  வெள்ளி அண்டாவில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் தீர்த்தவாரி செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். 

வழக்கமாக சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி ஏழுமலையான் கோவில் தெப்பக்குளத்தில் நடைபெறுவது வழக்கம். தீர்த்தவாரிக்கு பிறகு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பக் குளத்தில் புனித நீராடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தெப்பக் குளத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் சுவாமிக்கு நடைபெறக் கூடிய அனைத்து உற்சவங்களும் பக்தர்கள் இல்லாமல் தனிமையில் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு அனந்தபத்மநாப சுவாமி விரதத்தை ஒட்டி நடைபெற்ற சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி தெப்பக்குளத்தில் இல்லாமல் ரங்கநாதர் மண்டபத்தில் நடைபெற்றது. 

அனந்த பத்மநாப சுவாமி விரதம் 108 திவ்ய தேசங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள், வைகுண்ட ஏகாதசி, ரத சப்தமி, அனந்த பத்மநாப சுவாமி விரத தினங்களில் மட்டுமே சக்கரத்தாழ்வாருக்கு  தீர்த்தவாரி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
 



Leave a Comment