ராகு பகவான் ரிஷப ராசிக்கும்...கேது பகவான் விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சியாகினர்....
நவகிரகங்களில் மற்ற கிரகங்களைப் போல, ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு பௌதிக வடிவம் கிடையாது. உண்மையில் இவை, சூரியன் மற்றும் சந்திரனின் சுற்று வட்டப் பாதைகளின் குறுக்கு வெட்டுப் புள்ளிகள் அல்லது முடிச்சுகள் ஆகும். இவற்றில் வடக்குப் புள்ளி அல்லது முடிச்சு ராகு எனவும், தெற்குப் புள்ளி அல்லது முடிச்சு கேது எனவும் அழைக்கப்படுகின்றன.
எனவே தான், இந்த இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை இரண்டும், நமது பூர்வ ஜன்ம கர்ம வினைகளையும், அவற்றை நாம் இந்த ஜன்மத்தில் எவ்வாறு அனுபவிப்போம் என்பதையும் சுட்டிக் காட்டும் கிரகங்களாகத் திகழ்கின்றன. மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இவை, ஜோதிட சாஸ்திரத்தில், அசுப கிரகங்கள் என்றே கருதப்படுகின்றன.
மேலும், ராகு உலக சுக போகங்கள் மற்றும் பொருள் சார்ந்த இன்பங்களில் ஆர்வத்தை உண்டாக்கும் கிரகமாகவும், கேது, தொண்டு புரியும் மனநிலை, ஆன்மீகத் தேடல்கள் போன்றவற்றை மேம்படுத்தும் கிரகமாகவும் விளங்குகின்றன. ஒருவரது ஜாதகத்தில் இந்த இரு கிரகங்களும் ஆற்றலுடன் விளங்கும் பொழுது, அவரது எண்ணம், உணர்வு ஆகியவற்றை மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவையாகவும், இவை திகழ்கின்றன.
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி ஸ்ரீசார்வரி வருஷம் - தக்ஷிணாயனம் - வர்ஷ ரிது - ஆவணி மாதம் 16ம் தேதி - செவ்வாய்க்கிழமை - 01.09.2020 - இன்றைய தினம் தினசுத்தி அறிவது - பௌர்ணமியும் - அவிட்ட நக்ஷத்ட்ரமும் - அதிகண்ட நாமயோகமும் - பத்ரை கரணமும் - சித்தயோகமும் - கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி மதியம் 2.16க்கு (நாழிகை: 20.24) தனுசு லக்னத்தில் ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகி இருக்கிறார். மாறக்கூடிய ராகு பகவான் பிலவ வருஷம் - உத்தராயணம் - சிசிர ரிது - பங்குனி மாதம் 07ம் தேதி (07.03.2022) - திங்கள்கிழமை வரை ரிஷபத்தில் இருந்து அருளாசி வழங்குவார். அதேபோல கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகி இருக்கிறார். மாறக்கூடிய கேது பகவான் பிலவ வருஷம் - உத்தராயணம் - சிசிர ரிது - பங்குனி மாதம் 07ம் தேதி (07.03.2022) - திங்கள்கிழமை வரை விருச்சிகத்தில் இருந்து அருளாசி வழங்குவார்.
ராகு - கேதுக்கள் சகோதரர்களாவார்கள். ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும். ஆனால் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த கிரகங்களுக்கு உண்டு. எந்த வீட்டில் இருக்கிறார்களோ அவர்களது ஆதிபத்தியத்தை இந்த கிரகங்கள் நமக்குக் கொடுப்பார்கள். உதாரணமாக ஜனன கால ஜாதகத்தில் மேஷ ராசியில் ராகு இருக்கிறார் என்றால் அவர் மேஷ ராசியின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிபத்தியத்தை எடுத்துக் கொள்வார்.
Leave a Comment