திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் மீண்டும் தொடங்கியது....


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதன்பிறகு  மத்திய அரசு ஊரடங்கு தளர்வு செய்த பிறகு ஜூன் 11 தேதி முதல் ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் திருப்பதியில் தினந்தோறும் 3 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். 

இந்நிலையில் திருப்பதியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது.இருப்பினும் ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் பெற்ற பக்தர்கள் மட்டும் தினந்தோறும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இன்று முதல் மீண்டும் திருப்பதி அலிபிரியில் உள்ள பூ தேவி காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வறை, திருப்பதி பேருந்து நிலையம் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுவது தொடங்கப்பட்டது. மீண்டும் இலவச தரிசன டிக்கெட் வழங்குவது தொடங்கப்பட்டாலும்  டிக்கெட் பெறுவதற்கு மட்டும் பக்தர்களிடையே ஆர்வம் குறைந்த அளவிலேயே முதல் நாளான இன்று  காணப்பட்டது . 
 



Leave a Comment