தனுசு ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
தனுசு ராசி அன்பர்களே,
ராகு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்!
ராகு பகவான், இப்பொழுது, உங்களது தனுசு ராசிக்கு ஆறாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது உங்களுக்கு, வரவேற்கத்தக்க ஒரு காலமாக இருக்கும். நீங்கள் உங்கள் முழுத் திறமையுடன் பணியாற்றி, அதிக உற்பத்தித் திறனை ஈட்டுவீர்கள். இது, நீங்கள் இன்னும் ஆர்வமுடனும் பணியாற்ற உதவும். எனவே, இப்போது உங்கள் தொழிலிலும், பணியிலும் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். இருப்பினும், பணியிடத்தில் நீங்கள் சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், உங்களது சரியான முடிவு எடுக்கும் திறன், இந்த சவால்களை நீங்கள் திறமையாகக் கையாள உதவும். இது போன்ற உங்கள் செயல்திறன் மற்றும் சாதனைகளுக்காக, வேலையில் நீங்கள் அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நீங்கள் போட்டிகளிலும் வெற்றி பெற்று விருதுகளைப் பெறக்கூடும். இப்போது எதிரிகளையோ அல்லது போட்டியாளர்களையோ நீங்கள் எதிர்கொள்ள நேர்ந்தாலும், அவர்களையும் வென்று வெற்றி நடைபோடுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் எந்தக் குறைபாடும் ஏற்படும் வாய்ப்பில்லை. தவிர, இப்பொழுது உங்கள் அனைத்துக் கடன்களையும் திருப்பிச் செலுத்தி, நீங்கள் அவற்றை அடைத்து விடும் வாய்ப்புள்ளது.
ஆனால் அதே நேரம், நீங்கள் சில புதிய கடன்களையும் வாங்க நேரிடலாம். மேலும், இந்தக் காலகட்டத்தில், நீங்கள் தன்னலமற்ற சேவையில் ஈடுபடுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஏதாவது மனஸ்தாபங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவர்றைச் சரி செய்து, நல்லிணக்கம் காணவும் இது சரியான நேரமாகும். எனவே, இந்தப் பெயர்ச்சி, வாழ்க்கையின் பல துறைகளிலும் உங்களுக்குச் சாதகமாக அமையும் எனலாம்.
கேது உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்!
கேது பகவான், இப்பொழுது, உங்கள் தனுசு ராசிக்குப் பன்னிரண்டாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக, இவர் ஆன்மீக நாட்டத்தைத் தூண்டி, உங்களை ஆன்மீகப் பாதையில் அழைத்துச் செல்லக்கூடும். எனவே, ஆன்மீக ஆர்வம் உள்ளவர்களுக்கும், மோட்சம், வீடுப்பேறு ஆகியவற்றில் நாட்டம் கொண்டவர்களுக்கும், இந்தப் பெயர்ச்சி, அவர்களது ஆன்மீக நோக்கங்களுக்குச் சாதகமாக அமையும்.
இருப்பினும், நன்கொடை அளிப்பது, தொண்டு அல்லது பரோபகாரம் செய்வது போன்றவற்றில், அளவிற்கு அதிகமாக ஈடுபட வேண்டாம். ஏனெனில், பிறருக்கு உதவுவதற்காக உங்கள் பணத்தை அதிகம் செலவு செய்தால், பின்னர் உங்களுக்குத் தேவைப்படும் பொழுது, பணப் பற்றாக்குறை ஏற்பட்டு விடலாம். எனவே, ‘தனக்கு மிஞ்சி தான் தான தருமம்’ என்பதை மனதில் கொண்டு எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருப்பது நல்லது. எனினும், வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இந்தக் கால கட்டம், சாதகமாக இருக்கும்.
எனவே உங்கள் திட்டங்களைச் செயல்படுத்த இந்த நேரத்தை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், உங்களில் சிலருக்கு இப்பொழுது, தூக்கமின்மைப் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புள்ளது. தவிர, இந்த நேரத்தில், பொதுவாக உங்கள் மனதில் ஏதோ ஒரு வகையான விரக்தி மனப்பான்மை தோன்றலாம்.
இது உங்கள் ஆன்மீக வேட்கையை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனினும், ‘அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்பது போல, உங்கள் ஆன்மீக நாட்டத்தையும் ஒரு வரையறைக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால், குடும்பம் மற்றும் சமூகத்தின் முன் உங்கள் மதிப்பு, மரியாதைக்கு பாதிப்பு ஏற்படலாம்.
நாகை சுந்தர மூர்த்தி, சோதிட ஆய்வாளர்
Leave a Comment