சிம்மம் ராசிக்கு 2020 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
ராகு கேது பெயர்ச்சி 2020
நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்குப் பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். சிம்ம ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்குப் பத்தாம் வீட்டிலும், கேது நான்காம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில், பத்தாம் வீடு என்பது வேலை, தொழில், சமூக அந்தஸ்து, வெற்றி, அதிகாரம், மற்றும் பொதுவாழ்க்கை போன்றவற்றையும், நான்காம் வீடு, தாய், சுக போகம், கல்வி, நிலம் மற்றும் சொத்துக்களையும் குறிக்கும்.
நவகிரகங்களில் மற்ற கிரகங்களைப் போல, ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு பௌதிக வடிவம் கிடையாது. உண்மையில் இவை, சூரியன் மற்றும் சந்திரனின் சுற்று வட்டப் பாதைகளின் குறுக்கு வெட்டுப் புள்ளிகள் அல்லது முடிச்சுகள் ஆகும். இவற்றில் வடக்குப் புள்ளி அல்லது முடிச்சு ராகு எனவும், தெற்குப் புள்ளி அல்லது முடிச்சு கேது எனவும் அழைக்கப்படுகின்றன. எனவே தான், இந்த இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை இரண்டும், நமது பூர்வ ஜன்ம கர்ம வினைகளையும், அவற்றை நாம் இந்த ஜன்மத்தில் எவ்வாறு அனுபவிப்போம் என்பதையும் சுட்டிக் காட்டும் கிரகங்களாகத் திகழ்கின்றன.
மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இவை, ஜோதிட சாஸ்திரத்தில், அசுப கிரகங்கள் என்றே கருதப்படுகின்றன. மேலும், ராகு உலக சுக போகங்கள் மற்றும் பொருள் சார்ந்த இன்பங்களில் ஆர்வத்தை உண்டாக்கும் கிரகமாகவும், கேது, தொண்டு புரியும் மனநிலை, ஆன்மீகத் தேடல்கள் போன்றவற்றை மேம்படுத்தும் கிரகமாகவும் விளங்குகின்றன. ஒருவரது ஜாதகத்தில் இந்த இரு கிரகங்களும் ஆற்றலுடன் விளங்கும் பொழுது, அவரது எண்ணம், உணர்வு ஆகியவற்றை மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவையாகவும், இவை திகழ்கின்றன.
சிம்ம ராசி அன்பர்களே,
ராகு உங்கள் ராசிக்குப் பத்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்!
ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான சிம்மத்திற்குப் பத்தாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது உங்களுக்கு நற்பலன்களை அளிக்கும் மாற்றமாக அமையும். உங்கள் பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். இதன் காரணமாக, நீங்கள் முழு வீச்சுடனும், உங்கள் ஆற்றல் நன்கு வெளிப்படும் வகையிலும் பணியாற்றுவீர்கள். உங்களில் சிலருக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, வேலையில் சாதகமான இடமாற்றம் போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெற்றிக்கான முயற்சிகளில் நீங்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.
உங்கள் சமூக அந்தஸ்து உயரவும், உங்களுக்குத் தலைமைப் பொறுப்பும், அதிகாரமும் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. நீங்கள் ஒரு நிறுவனத்தின் தலைவர், இயக்குனர் அல்லது அரசியலில் உயர்ந்த நிலை போன்ற பதவிகளில் இருந்தால், மேலும் உயர்வு பெற்று, இன்னும் ஒரு படி முன்னேறிச் செல்லவும் வாய்ப்புள்ளது. நீங்கள் ஏதாவது ஒப்புதல் அல்லது அங்கீகாரத்திற்கு எதிர்பார்த்துக் காத்திருந்தால், அதுவும் கூட, இந்தப் பெயர்ச்சிக் காலத்தில் கிடைக்கக் கூடும். பொதுவாக, இந்த நேரத்தில், உலக இன்பங்கள், வெற்றிகள் கிடைக்கப் பெறுவீர்கள்; கடந்த காலங்களில் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரம், ஆதரவு, பாராட்டு போன்றவற்றையும் பெறும் வாய்ப்புள்ளது.
கேது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்!
கேது பகவான், இப்பொழுது, உங்களது ராசியான சிம்மத்திற்கு நான்காம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்தக் காலகட்டம், உங்களுக்கு அசௌகரியமாக அமையக்கூடும். தாய் மற்றும் தந்தை வழி உறவினர்களிடம் நீங்கள் நல்ல உறவைப் பராமரிப்பது அவசியம். குறிப்பாக, உங்கள் தாயிடம் அனுசரித்து நடந்து கொள்வது, அவருடன் இணக்கமான உறவை ஏற்படுத்த உதவும். உங்கள் தாயாருக்கு இந்தக் காலக் கட்டத்தில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கக் கூடும். தவிர, வீடு வாங்குவது விற்பது போன்ற நடவடிக்கைகளுக்கு இந்தக் காலக் கட்டம் ஏற்றதல்ல. எனவே நிலம், வீடு, மனை போன்றவை வாங்குவது அல்லது விற்பது குறித்து சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
உங்கள் வாகனத்தைப் பராமரிக்க வேண்டிய சூழ்நிலையும் இப்பொழுது உருவாகலாம். பொதுவாக உங்கள் வசதிகள், சுகங்கள் போன்றவை குறைவதாக உங்களில் சிலர் நினைக்கக்கூடும். மேலும், மேற்படிப்பிற்காக புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், அல்லது தாங்கள் விரும்பும் கல்லூரிகள் போன்றவற்றில் சேர்க்கை பெறக் காத்திருக்கும் மாணவர்களுக்கும் இது சாதகமான நேரமாக இருக்காது. பொதுவாக உங்கள் மனதில் ஒரு திருப்தியற்ற நிலையே இருக்கும்; குறிப்பாக, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை இந்த மனநிலையைப் பிரதிபலிக்கும்.
நாகை சுந்தர மூர்த்தி, சோதிட ஆய்வாளர்
Leave a Comment