திருப்பதி ஏழுமலையான் நகைகள் பக்தர்கள் பார்வைக்கு.....
திருப்பதி ஏழுமலையான் கோவில் நகைகள் விரைவில் டிஜிட்டல் வடிவில் முப்பரிமாணத்துடன் பக்தர்கள் பார்வைக்கு கொண்டு வர பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல மாமன்னர்கள், பேரரசர்கள் தங்கள் வெற்றிக்கு கிடைத்த காணிக்கையாக ஏழுமலையானை தரிசனம் செய்து பல வைர, வைடூரிய, மாணிக்கங்கள், பொருத்தப்பட்ட விலை மதிப்புமிக்க நகைகளை ஆபரணங்களை வழங்கியுள்ளனர். அவ்வாறு கிருஷ்ணதேவராயர் மைசூர் மகாராஜா உள்பட பல மாமன்னர்கள் முதல் ஆங்கிலேயர்கள் ஆட்சியிலும் தற்பொழுதும் பக்தர்கள் ஆபரணங்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
அவ்வாறு வழங்கப்பட்ட ஆபரணங்களில் 450 க்கும் மேற்பட்ட ஆபரணங்கள் சுவாமிக்கு தினந்தோறும், வாராந்திர, வருடாந்திர உற்சவங்களுக்கு அலங்கரிக்கப்பட்டு வருகிறது. விலை மதிப்பு மிக்க இந்த ஆபரணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கைகள் இருந்து வந்தது. இதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானமும் எடுத்து வந்தது.
ஆனால் சுவாமிக்கு அலங்கரிக்க கூடிய விலை மதிப்புமிக்க ஆபரணங்களை பக்தர்கள் பார்வைக்கு வைப்பது அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் ஆகம விதிகளுக்கு முரணானது என்று ஆகம ஆலோசகர்களும் தெரிவித்தனர். இதையடுத்து இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு சுவாமியின் நகைகளை முப்பரிமாண வடிவில் டிஜிட்டல் முறையில் வடிவமைத்து பக்தர்கள் பார்வைக்குக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இதற்காக டெக் மகேந்திரா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள தேவஸ்தானம் இதற்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளது.
ஆறு மாதம் முதல் ஓரு ஆண்டுக்குள் திருமலையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா அருங்காட்சியகத்தில் ஏழுமலையானுக்கு அலங்கரிக்க கூடிய ஆபரணங்கள் முப்பரிமாண வடிவில் பக்தர்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலமாக ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எவ்வாறு உள்ளது, பாதுகாப்பாக உள்ளதா என்ற சந்தேகங்கள் இல்லாமல் முழு திருப்தி அடைய செய்யும் விதமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Comment