பதினாறு சம்பத்துக்களையும் அள்ளித்தரும் கோ பூஜை


 பசுவின் உடல் முழுவதும் தேவர்கள் வசிப்பதாக ஐதீகம். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தேவர்கள் வசிக்கின்றனர். அதனால் தான் பசுவை வலம் வந்து வணங்கினால் முப்பது முக்கோடி தேவர்களை வணங்கின புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள் சான்றோர்கள்.

பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக  ஐதீகம்.எனவே, கோமாதா பூஜை செய்யும் போது, பசுவை முன்புறமாக தரிசிப்பதைவிட, பின்புறம் தரிசனம் செய்வது மிகவும் நன்மை தரும்.

கோ பூஜை செய்யும் போதும், பசுவின் முன்நெற்றி மற்றும் வால்பகுதியில் சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்து வழிபட வேண்டும்.பசுவின் சாணமும் லட்சுமிஅம்சமாகும். அதிகாலையில் பசுஞ்சாணத்தை கொண்டு வீட்டு வாசலை மெழுகி ,கோலம் இட்டால் , மகாலட்சுமி நம் வீடு தேடி வருவாள் என்றொரு நம்பிக்கை நிலவுகிறது.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகிய ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன என்று புராணங்கள் கூறுகிறது. பசுவின் கோமயம் எனப்படுகின்ற சாணம்,கோமியம் எனப்படுகிற மூத்திரம்,  பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. இவற்றைக் கொண்டு சிவபெருமானுக்கு செய்யப்படுகிற  பஞ்சகவ்ய அபிஷேகம்  மிகவும் விசேஷமானது. திருமகள் வாசம் செய்யும் இதன் பின்பாகத்தை  தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும்.

கோபூஜையை செய்வதால் சகல சம்பத்துக்களும், முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கிவிடும் என்பதால் கோமாதாவை வணங்கி பதினாறு செல்வத்தைப் பெற்று சிறப்புடன் வாழ்வோம்.
 



Leave a Comment