சகல செல்வங்களும் தரும் ஆடி கிருத்திகை....


எல்லா மாதத்திலும் கிருத்திகை வந்தாலும் ஆடி கிருத்திகைக்கும் மிகுந்த சிறப்பு உண்டு. ஆடி கிருத்திகை தினத்தன்று விரதம் இருந்து, ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான்.

அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.

கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று நீராடி பகலில் உணவு உண்டு இரவில் ஏதும் உண்ணாதிருத்தல் வேண்டும். மறுநாள் கார்த்திகை அன்று அதிகாலையில் நதிநீராடி திருநீறு பூசி முருகனை வழிபாடு புரிய வேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தி முருக மந்திரங்கள் முருகன் துதிகளை பாராயணம் செய்து ஜெபம் தியானம் கோவில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும்.

இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்ன தானம் செய்து அவர்களுடன் கூடி உணவுண்ண வேண்டும்.

ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம். மாதா மாதம் வரும் கார்த்திகை மாதக் கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும்.

கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும். மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும்.

கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள்.

அது போல ஆடி கிருத்திகைக்கும் மிகுந்த சிறப்பு உண்டு. ஆடி கிருத்திகை தினத்தன்று ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியது எல்லாம் கிடைக்கும்.
 



Leave a Comment