பில்லி, சூன்யம் பயம் போக்கும் கருட பகவான் வழிபாடு....


கருட பகவானே ஆழ்வார்களில் பெரியாழ்வாராக அவதரித்தார். பாண்டியன் சபையில் பரதத்வ நிர்ணயம் செய்து பொற்கிழியைப் பெற்றபோது, மன்னன் பெரியாழ்வாரைப் பெருமைப்படுத்தி ராஜவீதிகளில் யானை மீதேற்றி பவனிவரச் செய்தான். அப்போது தன் பக்தனின் வைபவத்தைக் கண்டு மகிழ திருமால் கருடாரூடனாக வானில் காட்சி கொடுத்தான்.

ராமாயண காலத்தில் போர்க் களத்தில் ராம-லட்சுமணர்களை அசுரர்கள் நாகபாசத்தால் கட்டிப் போட, அவர்கள் மயங்கி விழுந்த போது கருட பகவான் வந்து தன் சிறகுகளால் வீசி அவர்களை மூர்ச்சையிலிருந்து தெளிய வைத்தார். கிருஷ்ணாவதாரத்திலும் சத்ய பாமாவுக்காக பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்தார்.

இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக்கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்' என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது. இவர் பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆதிமூலமே என்று கஜேந்திரன் கதறிய போது கருட வாகனத்தில் பறந்து வந்து காத்தவர் பெருமான்.

ஜோதிடத்தில் பறவைகளுக்கு காரகர் புதபகவானாவார். புதனின் அதிதேவதை ஸ்ரீ மஹாவிஷ்னுவாகும். நான் பறவைகளில் பட்சி ராஜனாக கருடனாயிருக்கிறேன் என கீதையில் கூறியுள்ளான் கண்ணன். எனவே கருடாழ்வார் புதனின் அம்சம் பெற்றவர் ஆகும்.

ஓட்டுனர்களுக்கும் பெரிய வாகனங்களுக்கும் புதனே காரகர் என்கிறது பாரம்பரிய நூல்கள். புதனின் அதிதேவதையான ஸ்ரீ மகாவிஷ்னுவிற்க்கு வாகனம் மற்றும் வாகன ஓட்டுனராகவும் புதன் ஆதிக்கம் பெற்ற கருடபகவான் விளங்கியது குறிப்பிடத்தக்கது.

கருடாழ்வார் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர் என்பதால் ராகுவின் தன்மையும் பெற்றிருக்கிறார். ஸ்வாதி நக்ஷத்திரம் சுக்கிரனின் வீடாகிய துலாராசியில் அமைந்திருப்பதால் சுக்கிரனின் அதிதேவதையாகிய ஸ்ரீ மஹாலக்ஷமியின் அம்சமாகவும் விளங்குகிறார்.

சுக்கிர ஸ்தலமாகிய ஸ்ரீ ரங்கத்தில் பெரிய திருவடியாகி பெரிய கருடனாகவும் அமிர்த கலச கருடனாகவும் அருள்புரிவது குறிப்பிடத்தக்கது. 
 



Leave a Comment