வரங்களை வாரி வழங்கும் வரலட்சுமி விரதம் தோன்றிய கதை.... 


செல்வத்தை அளிக்கும் வரலட்சுமியை வரவேற்கும் விதமாக இல்லம்தோறும் செய்யப்படும் பூஜை தான் வரலட்சுமி விரதமாகும். பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம்.

பெயர்தான் வரலட்சுமி விரதமே தவிர, வெறும் செல்வத்தை மட்டும் தரும் விரதம் இல்லை இது. நல்ல உடல் நலம், நீண்ட ஆயுள், மாங்கல்ய பலம், குழந்தைப்பேறு என்று எல்லாவகையான நலன்களையும் தரக்கூடியது; வரமாக வாரி வழங்கக்கூடியது.
 
இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கச் சொல்லி முதன் முதலாக சொன்னவர் மகாலட்சுமியேதான்! ஆமாம், சாருமதி என்ற பெண்ணின் கனவில் வந்து இந்த விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது என்று சொன்னாள். அந்த சாருமதி, வடஇந்தியாவில், மகத நாட்டில் ஒரு கிராமத்தில் வாழ்ந்த பெண். தன் மாமனார், மாமியாருக்கு எல்லாப் பணிவிடைகளும் செய்து, கணவனை தெய்வமாக மதித்து, கற்புநெறி தவறாமல், பயபக்தியோடு வாழ்க்கை நடத்தியவள்.

அவளுடைய இந்தப் பண்புகளைப் பார்த்து சந்தோஷப்பட்ட மகாலட்சுமி, அவள் மேலும் எல்லா சௌபாக்கியங்களையும் பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காக அவள் கனவில் வந்து வரலட்சுமி விரதத்தைப் பற்றியும் அதைக் கடைப்பிடிக்க வேண்டிய முறை பற்றியும் விவரமாகச் சொன்னாள், மஹாலட்சுமி.

இதில் ஒரு விஷயத்தை கவனித்தல் வேண்டும். அதாவது, மகாலட்சுமி சாருமதியின் குணத்தைப் பாராட்டி உடனே செல்வத்தை வாரி வழங்கிவிடவில்லை. விரதம் இருக்கச் சொல்லி, அதன் பலனாகத்தான் அவள் எந்த வளத்தையும் அனுபவிக்கவேண்டும் என்றும் உணர்த்தியிருக்கிறாள். ’இந்த விரதத்தைப் பெண்கள்தான் அனுசரிக்கவேண்டும் என்பதில்லை, ஆண்களும் மேற்கொள்ளலாம்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் மற்றும் விக்கிரமாதித்த மகாராஜா போன்றவர்களும் இந்த விரதத்தை மேற்கொண்டிருந்திருக்கிறார்கள். ஆடி மாதம் பவுர்ணமிக்கு முந்தின வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள். சில வருடங்களில் ஆவணி மாதத்திலும் இந்த விரதநாள் வரும். அதேபோல இந்த ஆண்டும் ஆவனி 8 ஆம் தேதி வரலஷ்மி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.



Leave a Comment