கருட பஞ்சமி வழிபாடு பலன்கள்!!
கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், பெருமாள் வழிபாடும் சகல பாவ, தோஷங்களை போக்கி சுப யோகத்தை அமைத்து கொடுக்கும். திருமாலின் நித்ய சூரிகளின் தலையாய கருடாழ்வார் எனும் பெரிய திருவடி அவதரித்த திருநாளை கருட பஞ்சமி என வழிபடுகிறோம். கருடனைப் போல பலசாலியும், புத்திமானாகவும், வீரனாகவும், விவேகியாகவும் குழந்தைகள் உருவாக தாய்மார்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர்.
பெருமாளுக்கு எத்தனையோ வாகனங்கள் இருந்தாலும் கருடன் மீது வரும் சேவை மிகவும் விசேஷம். ‘ஆழ்வார்‘ என்ற சிறப்பு பெயர் கருடனுக்கு உண்டு. பெருமாளின் தலைக்கு மேலே கருடன் கொடியாகவும், பெருமாளின் காலிற்கு கீழே வாகனமாகவும் காட்சி தருகிறார். விஹாகேஸ்வரன் வைநதேயின், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி என பல பெயர்கள் கருடனுக்கு உண்டு. கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், கும்பாபிஷேகம் போன்ற கால நேரங்களில் வானில் கருடன் தெரிவதும், வட்டமடிப்பதும் மங்களகரமான ஒன்றாகும்.
கருட மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. எதிரிகளை வெல்வதற்கும், விஷங்களை முறிக்கவும், மந்திர, தந்திரங்களுக்கும், தீய சக்திகளை ஒடுக்கவும் கருட மந்திரம் நல்ல பலன் தரும். கார்க்கோடகன் என்னும் நாகத்தை அடக்கி பிடித்து, நாகங்களை ஆபரணமாக தரித்துள்ளதால் ராகு-கேது தோஷமுள்ளவர்கள் கருட தரிசனம் செய்வது நலம் தரும்.
பெண்கள் கருட பஞ்சமி விரதம் இருந்தால் மாங்கல்ய பலம் கூடும். கன்னி பெண்களுக்கு திருமண தடைகள் நீங்கும். குடும்பத்தில் சுபவிசேஷங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். மனகுழப்பம், மனசஞ்சலம், தரித்திரம் நீங்கும்.
Leave a Comment