வெள்ளிக்கிழமை ... கூடுதல் சிறப்புடன் ஆடிப்பூரம்....


ஆடிப்பூரம்... ஆடி மாதத்தில் ‘பூரம்’ நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் தினமே ஆடிப்பூரம். இது அனைத்து அம்மனுக்கும் உரிய திருநாளாக போற்றப்படுகிறது.

ஆண்டாள் அவதரித்த திருத்தலமான திருவில்லிபுத்தூரை, ‘கோதாதேவி அவதார ஸ்தலம்’ என்றும் அழைப்பதுண்டு. இதனால் ஆடிப்பூரத்தன்று திருவில்லிபுத்தூர் உள்ளிட்ட வைணவ கோயில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். வைணவ கோயில்களிலும் திருவாடிப்பூரம் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது.

மங்கலமான இந்நாளில் திருமணமாகாத பெண்கள் ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. மேலும் அம்மன் ஆலயங்களுக்கு சென்று மனதார வணங்கினால், மனம் போல் மாங்கல்யம், புத்திர பாக்கியம் கிடைக்கும். புனிதமான இந்த தினத்தில் அம்பிகை பூப்பெய்தினாள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் அம்பிகைக்கு, தங்கள் வீட்டு பெண் போல் வளைகாப்பு வைபவமும், பூப்பெய்தல் சடங்கும் நடத்தி பக்தர்கள் வழிபடுவார்கள்.

வெள்ளிக்கிழமையன்று ஆடிப்பூரம் வருவது கூடுதல் சிறப்பு. ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன், சூரியனின் ராசியான சிம்மத்திலும் இடம் பெயர்ந்த போது, நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி, பூர நட்சத்திரம் கூடிய சனிக்கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. வடமாநிலங்களில் ‘கோதாதேவி’ என்று அழைப்பர்.

ஆடிப்பூரத்தை முன்னிட்டு, வைணவ கோவில்கள் உள்ளிட்ட பல கோவில்களில் அம்பாளுக்கு வளைகாப்பு, விளக்கு பூஜை என சிறப்பு வழிபாடு இன்று நடத்தப்படுகிறது. மேலும், சித்தர்கள், யோகிகள் இந்நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
 



Leave a Comment