ஆடிப் பூரமும் அம்பாளும்


ஆடிப் பூரம் ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள். தன் பக்தர்களை குழந்தைகளாக பார்த்தாலும் அம்மனுக்கு ஒரு கவலை இருந்தது. அதாவது திருமணமான எல்லா பெண்களையும் போல தானும் தாய்மை அடையவில்லையே என்று மனம் ஏங்கினாள். முருகனும், விநாயகனும் மற்றும் உன்னுடைய பக்தர்களும் உனக்கு குழந்தைகள்தான் என்று ஈசன், அம்மனை சமாதானம் செய்தாலும் அம்பாள் ஆறுதல் அடையவில்லை. அதனால் புட்லூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் நிறைமாத கர்ப்பிணியான வடிவத்தில் காட்சி தந்தாள். இதனால் தேவலோக பெண்கள் அம்பாளுக்கு வளையல்களை அணிவித்து அலங்காரம் செய்தார்கள். இதனால் அம்மனின் மனம் குளிர்ந்தது.

ஸ்ரீமகாவிஷ்ணு, விநாயகர் முன் தோப்புகரணம் போட்டதால் இன்றுவரை விநாயகர் முன் நாம் தோப்புகரணம் போடுவதுபோல, அம்மனுக்கு தேவலோகத்தினர் வளைகாப்பு நடத்தி, வளையல் அணிவித்து அம்மனை மகிழ்வித்ததால் இன்றுவரை அம்பாளின் பக்தர்களாகிய நாமும் அம்பாளுக்கு வளையல்களை அணிவித்து அம்மனின் மனதை சந்தோஷப்படுத்துகிறோம். அதுபோலவே இன்னும் ஒரு சம்பவமும் இருக்கிறது.

வளையல் அணியவே புற்றில் இருந்த வெளியே வந்த அம்மன் பொதுவாகவே பெண்களுக்கு கைநிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். அம்மனுக்கும் அந்த ஆசை இருக்காதா?. அவளும் பெண்தானே. சக்திதேவி தன் ஆசையை எப்படி நிறைவேற்றிக்கொண்டாள் தெரியுமா? ஒரு வளையல் வியாபாரி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வளையல்களை விற்க வருவது வழக்கம். ஒருநாள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த வளையல்களில் பாதி விற்றுவிட்டார் மீதி இருந்த வளையலை மறுநாள் விற்கலாம் என்று நினைத்தார். 

பெரியபாளையம் வரும்போது அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. நடக்க முடியாத அளவில் சோர்வடைந்தார். இதனால், அங்கு இருந்த ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு அந்த வளையல் வியாபாரி அங்கேயே தூங்கிவிட்டார். நல்ல தூக்கம். சில மணி நேரத்திற்கு பின் கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு பதறினார். சுற்றுமுற்றும் தேடினார். கிடைக்கவில்லை.

கவலையுடன் தன் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். அன்றிரவு, அந்த வளையல் வியபாரியின் கனவில் அம்மன் தோன்றினாள். “நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன். பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும்.” என்றாள் அம்பாள். தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொன்னார் வியாபாரி. அத்துடன் சென்னைக்கு அவர்களை அழைத்து வந்து, பெரியபாளையம் மக்களிடத்திலும் தான் கண்ட கனவை பற்றி சொன்னார்.

இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்கள். அம்மனுக்கும் கைநிறைய வளையல் அணியவேண்டும் என்று ஆசை ஏற்பட்டதால்தான் அந்த வளையல் வியாபாரி வைத்திருந்த வளையல்களை எடுத்துக்கொண்டார் அம்பாள். வளையல் அணிய வேண்டும் என்ற ஆசையால்தான் புற்றில் இருந்தும் வெளிப்பட்டாள். அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுபிக்ஷங்கள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும். அதேபோல ஆண்டாள் தோன்றிய தினம் ஆடிபூரம். இந்த நன்னாளில் ஆண்டாளை தரிசித்து பூமாலை, வளையல்களை கொடுத்து வணங்கி ஆண்டாளின் ஆசியை பெற்ற வளையல்களில் இரண்டு வளையல்களை அணியலாம். அதேபோல ஆண்கள் ஆண்டாளுக்கு அணிவித்த மலர்களை சிறிது வாங்கி தங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டாலும் நல்ல முயற்சிகள் வெற்றி பெறும். மங்களங்கள் யாவும் கைக்கூடும்.
 



Leave a Comment