அமிர்தமாகும் ஆடிக்கூழ்..... புராணக்கதை.....


ஆடி மாதத்தில் மழைக்காலம் தொடங்குவதால் தொற்று நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புண்டு. வெப்பம் குறைவான நாள்களில் எளிதில் செரிக்கக் கூடிய உணவு கூழ். இயற்கையாகவே அதிக அளவு எதிர்ப்புச் சக்தியையும், வலிமையையும் உடலுக்கு வழங்கக்கூடியது. மேலும் வேப்பிலையும், எலுமிச்சைப் பழமும் இயற்கையான கிருமிநாசினிகள். இதனால் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கப்படுகின்றன.   

புராணக்கதை.....

கேட்பவை அனைத்தையும் அளிக்கும் காமதேனு பசுவை, ஜமதக்னி முனிவரிடமிருந்து அபகரிக்க கார்த்தவீர்யார்ஜுனரின் மகன்கள் திட்டம் போடுகிறார்கள். ஒருதருணத்தில், முனிவரைக் கொன்று காமதேனுவைக் கவர்ந்துசென்றுவிடுகிறார்கள். கணவர் இறந்ததும் தானும் அக்னிப்பிரவேசம் செய்கிறாள் ஜமதக்னியின் மனைவி ரேணுகாதேவி. ஆனால், `தெய்வாம்சம் பொருந்திய ரேணுகா தேவியினால் உலகத்துக்கு நன்மை ஏற்படவேண்டும்' என்று நினைத்த இந்திரன், வருண பகவானிடம் மழையைப் பொழியும்படி உத்தரவிடுகிறார். மழை பெய்து தீயை அணைத்துவிடுகிறது. ஆனாலும், ரேணுகாதேவியின் உடல் முழுவதும் தீக்காயங்கள் மற்றும் கொப்புளங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.  

தீக்காயத்தின் வெம்மையைத் தணிக்கவேண்டி, வேப்பிலையைச் சுற்றிக்கொள்கிறார் ரேணுகாதேவி. தீக்காயங்களுடன் போராடிய ரேணுகா தேவிக்குக் கிராமத்து மக்கள் கூழ் காய்ச்சிக் கொடுக்கிறார்கள். அத்துடன் வெல்லம், இளநீர் ஆகியவற்றையும் கொடுத்து உதவுகிறார்கள். உடல் முழுவதும் கொப்புளங்களுடன் போராடிக்கொண்டிருந்த ரேணுகா தேவியிடம் சிவபெருமான், ``பராசக்தியின் அம்சமான நீ மக்களை நோயிலிருந்து காக்க வேண்டும்" என்று அருள்புரிகிறார். எனவேதான் அம்மை நோயைக் குணமாக்கும் வேப்பிலைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும் கூழுக்கும் அம்மன் வழிபாட்டில் முக்கியப் பங்கு வழங்கப்படுகிறது. 

ஆடி மாதம் செவ்வாய் கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் இருக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் நீண்ட ஆயுள் பெறவும், குழந்தை வரம் கிட்டவும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்குத் திருமணம் நடைபெறவும் ஆடி மாத விரதம் நலம் பயக்கும்.
 



Leave a Comment