ஆடி மாத விழாக்கள், விசேஷங்கள்!


சூரியபகவான் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதமே ஆடி மாதம்.அம்மன் கோயில்கள் எல்லாம் திருவிழாக் கோலம் காணும். வீடுகளில் விரதங்கள் நடைபெறும். இத்தகைய சிறப்புகள் உடைய ஆடி மாதத்தின் சிறப்புகளை இந்த மாதத்தில் வரும் விழாக்களின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

ஆடி அமாவாசை (20.7.2020 அன்று வருகிறது)

இந்த நாளில் முன்னோர்களுக்குரிய வழிபாடுகளைச் செய்வது மிகவும் புண்ணிய பலன்களைத் தரும். அதனால்தான் ஆடி மாதத்தின் முதல் நாளை ஆடிப் பண்டிகை என்றே சொல்வது வழக்கம். ஆடிமாதத்தில் வரும் மற்றுமொரு புண்ணிய தினம் அனைவரும் தவறவிடக் கூடாத, ஆடி அமாவாசை. ஆடி அமாவாசை அன்று சமுத்திரக் கரைகளிலும் நதிக்கரைகளிலும் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் தரும் வழக்கம் உண்டு. இந்த நாளில் செய்யும் முன்னோர் வழிபாடு வாழ்வில் முன்வினை காரணமாக உண்டாகும் தீவினைப் பயன்களைக் குறைத்து நல்வினைப் பயன்களை அதிகப்படுத்தும். 

ஆடிப்பூரம், நாகர் சதுர்த்தி ((24.7.2020) 

இந்த முறை ஆடிப்பூரமும் நாக சதுர்த்தியும் ஒரே நாளில்  இயற்கை வழிபாடுகளில் ஒன்றான நாகர் வழிபாடு என்பது தென் இந்தியா முழுவதும் ஆதியில் இருந்துவந்த வழிபாடாகும். அதன் தொடர்ச்சியாகவே தற்போதும் நாம் ஆலயங்களில் அம்மன் வழிபாட்டோடு இணைத்துக் கொண்டாடுகிறோம். நாகசதுர்த்தி நாளில் பலர் வீடுகளில் நாகர் வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது. வழக்கமாக இந்த நாளில் ஆலயம் சென்று அங்கிருக்கும் நாகருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். ஆனால் தற்போது அந்த வாய்ப்பு இல்லை என்பதால் வீட்டிலேயே அதைச் செய்ய வேண்டும். நாகர் வழிபாடு ராகு தோஷத்தால் உண்டாகும் திருமணத் தடையினை நீக்கும் என்பது நம்பிக்கை. நாகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் கருட பஞ்சமி என்று கொண்டாடப்படும். நாகர் சதுர்த்தி கொண்டாடியவர்கள், கட்டாயம் கருட பஞ்சமி நோன்பையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நியதி.

மூன்று பிரதோஷம்


வழக்கமாக ஒரு மாதத்தில் இரண்டு பிரதோஷ தினங்களே வரும். ஆனால் இந்த முறை மூன்று தினங்கள் வருகிறது. அவற்றில் இரண்டு பிரதோஷம் சனிமஹாபிரதோஷம். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷமே மஹாபிரதோஷம். 18.7.2020 மற்றும் 2.8.2020 ஆகிய தினங்கள் சனிக்கிழமைகளில் வருகின்றன. மூன்றாவது பிரதோஷம் 16.8.2020 ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. நாமெல்லாம் சிவ வழிபாட்டில் ஈடுபட்டு நமக்கு உண்டாகும் துன்பங்கள் தீர்வதற்காக இறைவனே அருளும் புண்ணிய தினங்கள் இவை. இந்த நாளில் தவறாமல் சிவபுராணம் பாடி சிவபெருமானைப் போற்றி நமக்கு வரும் இன்னல்களிலிருந்து விடுதலை பெறலாம்.

வரலட்சுமி நோன்பு
சுமங்கலிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் வரலட்சுமி நோன்பு. ஆடிமாதம் பௌர்ணமிக்கு முன்புவரும் வெள்ளிக்கிழமையில் கடைப்பிடிக்க வேண்டிய இந்த விரதத்தை மேற்கொண்டால் வீட்டில் செல்வ வளம் சேரும் மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியம் மேம்படும் என்றும் நம்பப்படுகிறது. குறிப்பாகப் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக வாழும் வரம் அருளும் விரதம் இது என்பது ஆன்றோர்களின் வாக்கு



Leave a Comment