திருப்பதியில் ஒரு மாதத்தில் 2.63 லட்சம் பேர் தரிசனம்.... ரூ.15.80 கோடி உண்டியல் காணிக்கை.....


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக  நிறுத்தப்பட்ட தரிசனம் மீண்டும்    தொடங்கப்பட்டு  ஒரு மாதம் நிறைவு பெற்றுள்ளது. இந்த 30 நாட்களில் 2.63 லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்து, 15.80 கோடி ரூபாயை உண்டியலில் காணிக்கை செலுத்தி இருக்கின்றனர். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் ஜூன் எட்டாம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. 

அதன் பிறகு மத்திய அரசு ஊரடங்கு தளர்வு வழங்கி எட்டாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து 11ம் தேதி முதல் அனைத்து பக்தர்களும் தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டும்,  திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு தரிசனத்திற்கு ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பக்தர்கள்  என தொடங்கி தற்போது 12500 பக்தர்கள் வரை தினந்தோறும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா பரவலை ஒட்டி நிறுத்தப்பட்ட தரிசனம் மீண்டும் தொடங்கப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் கடந்த ஒரு மாதத்தில் 2 லட்சத்து 63 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் 15.80 கோடி ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர். 

ஒரு லட்சம் பக்தர்கள் வரை மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் தேவஸ்தானத்தில் பணிபுரியும் 50 போலீசார் உள்பட 100 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தினந்தோறும் 200 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



Leave a Comment