காரைக்கால் மாங்கனி திருவிழா .....


கணவர் கொடுத்தனுப்பிய இரண்டு மாங்கனிகளில் ஒன்றை சிவனடியார்க்கு அமுது படைத்த  காரைக்கால் அம்மையார் கணவர் வந்து  இரண்டாவது மாம்பழத்தையும் கேட்ட போது இறைவன் சிவபெருமானிடம் வேண்டி மாம்பழம் பெற்றதாக வரலாறு. இதனை நினைவு கூறும் விதமாகவே காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

63 நாயன்மார்களில் ஒருவரும் அம்மையப்பன் இல்லாத இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பு பெற்றவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் விமரிசையாக  நடைபெற்று வந்த  இந்த மாங்கனி திருவிழாவை எந்த காரணத்தை கொண்டும் நிறுத்தாமல் இந்த ஆண்டும் நடத்தியே ஆக வேண்டும் என்பது காரைக்கால் மக்களின் ஏகோபித்த விருப்பம்.  

காரைக்காலுக்கே பெருமை சேர்க்கும் விதமாக ,பெரிய திருவிழாவாக நடத்தப்படும் இந்த மாங்கனி திருவிழா கொரோனா பொது முடக்கம்  காரணமாக இந்த ஆண்டு நடைபெறுமா? நடைபெறாதா? என்கிற குழப்பம் நீடித்து வந்தது. இதற்கு விடையாக திருவிழாவை நடத்த புதுச்சேரி அரசு அனுமதி அளித்ததை அடுத்து கடந்த ஒன்றாம் தேதி இரவு 7 மணிக்கு பரமதத்த செட்டியார் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனித் திருவிழா தொடங்கியது. 

வழக்கம்போல கணபதி வழிபாடும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இரண்டாம் தேதி காலை காரைக்கால் அம்மையார் என்று பெயர்பெற்ற புனிதவதியாருக்கும் பரமதத்தருக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் நடைபெற்றது.

 இதன் தொடர்ச்சியாக நேற்று பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து வெள்ளை சாற்றி புறப்பாடு நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சி நாளான இன்று மாங்கனித் திருவிழா கைலாசநாதர் கோயிலுக்குள் நடைபெற்றது. வழக்கமாக சிவபெருமான் அடியார் கோலத்தில் எழுந்தருளி பவழக்கால் விமானத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து வேத பாராயணங்கள் முழங்க வீதியுலா நடைபெறுவது வழக்கம். அப்போது பக்தர்கள் வீடுகளிலிருந்தும்  வீட்டின் மாடிகளிலிருந்தும் ஏராளமான மாங்கனிகளை வீசி இரைப்பார்கள் .

அதனை பக்தர்களில்  வேண்டுதலுக்காக தாவித்தாவி பிடிக்கும் காட்சி வேறெங்கும் பார்க்க முடியாது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மாடிகளிலிருந்து இறைக்கப்படும் மாம்பழங்கள்  வானத்திலிருந்து மாம்பழ மழை பொழிவதைப் போல் தெரியும்.

இந்த மாங்கனிகளை பிடித்து சாப்பிட்டால் திருமணம் கை கூடும் என்பதும், குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதும் ஐதீகம் . இதனால் தங்களது வீட்டிலுள்ள  திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காகவும்,  குழந்தை பேறு கேட்டு வேண்டுதலுக்காகவும்,  அடித்துப் பிடித்து மாம்பழங்களை அள்ளிச் செல்லும் மக்களை ஆண்டுதோறும் காண முடியும்.

ஆனால் இந்த கொரோனா அச்சம் காரணமாக கோயிலுக்குள் மட்டும் நடைபெற்றது. சிவபெருமான் 4 வீதிகளையும் சுற்றி வருவது போல கோயிலுக்குள்ளேயே வெளிப் பிரகாரத்தில் 4 புறமும் சுற்றி கொண்டு வரப்பட்டது.  அப்போது கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ள உபயதாரர்கள், அறங்காவலர்கள் உள்ளிட்டோர் தங்களுக்குள்ளாகவே மாங்கனிகளை வீசி எறிந்து நிகழ்ச்சியை முடித்துள்ளனர்.  

இதனை தொடர்ந்து அமுது படையல் நிகழ்ச்சியும் கோயிலுக்குள்ளேயே நடைபெற்றது.        காரைக்கால் அம்மையாருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவோ, தரிசனத்திற்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.          திருவந்தாதி ,திருஇரட்டை மணிமாலை ஆகிய நூல்களை தமிழுக்கு கொடுத்த காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் விதமாக நடத்தப்படும் மாங்கனி திருவிழாவால் ஆரவாரம்  நிறைந்து  காணப்படும் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. 



Leave a Comment