அய்யப்பன் குத்துக்காலிட்டு அமர்ந்து தவமிருப்பது ஏன்?
சபரிமலை அய்யப்பன் கோவிலில் “தத்துவமசி” எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், “நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்” என்று பொருள்.
அய்யப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி (கருப்பசாமி) பதினெட்டுப் படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்துள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை, சுருட்டு படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.
சபரிமலையில் உள்ள பஸ்ம குளத்தில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல சபரிமலை அரவனை பாயசம் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து அரவனைப் பாயசம் தயாரிக்கப்படுகிறது.
சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தியன்று தோன்றும் ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.
சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் திறந்ததும் சுப்ரபாதம் பாடப்படும்.
அய்யப்பனுக்கு தினமும் இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும். பக்தர்களே பூக்களை கூடையில் எடுத்து வந்து கொடுக்கலாம்.
அய்யப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர்.
சபரிமலை அய்யப்பன் உற்சவர் ஆண்டுக்கு ஒரு தடவை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் நடைபெறும். பிறகு அய்யப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்துக்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாத 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த சமயத்தில் அய்யப்ப உற்சவரை தரிசிக்கலாம்.
சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம்.
ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறு அவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார். அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணை வதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும்.
வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை.
சபரி மலையில் ஐயப்பன் தவமிருக்கும்போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் இருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட தியானத்திலிருந்து எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்வதுண்டு.
ஐயப்பன் சிவனின் உடுக்கையை படுக்கவைத்த நிலையில் உள்ள பீடத்தில், சிவனைப்போல் தியான கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகும்.
ஐயப்பன் தன் வலது கையில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் முத்திரையையும், இடது கையில் ஜீவாத்மா பரமாத்மாவின் பாதத்தை சரணடையும் தத்துவத்தையும் குறிக்கிறார். அதாவது, மனிதன் இறைவனை சரணடைந்தால் அவனுடன் கலந்து விடலாம் என்பதை ஐயப்பனின் முத்திரை குறிக்கிறது. இந்த ஆசனத்தை சாதாரண மனிதர்கள் செய்வது கடினம்.
ஸ்ரீகிருஷ்ண அவதாரத்திற்குப் பிறகு இறைவன் மனித அவதாரம் எடுத்தது ஸ்ரீ ஐயப்பன் அவதாரம் தான் என்று ஆன்மிகப் பெரியோர் கூறுவர்.
குளத்து புழா அய்யப்பன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
Leave a Comment