கருட பட்சிகள் மோட்சம் பெற்ற நாச்சியார் கோவில் ..... 


கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோயிலில் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இத்தலத்தில் உறைந்துள்ள ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான ஸ்ரீனிவாச பெருமாளையும் கஷ்டங்கள் தீர்க்கும், கவலைகள் போக்கும் கல் பகவானையும் சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம். இந்த கோவிலில் மஹாவிஷ்ணு ஸ்ரீநிவாச பெருமாளாகவும், மஹாலஷ்மி நாச்சியாராகவும் கோயில் கொண்டுள்ளனர்.

கோவிலின் வரலாறு

கோச் செங்கணான் என்ற சோழ மன்னன் சிவனுக்கு எழுபது கோயில்கள் கட்டினான் என்றும் விஷ்ணுவுக்காகக் கட்டியது திருநறையூரில் உள்ள திருநறையூர் நம்பி திருக்கோவில் மட்டுமே என்றும் அறியப்படுகிறது. சோழ மன்னன் கோச் செங்கணான் கட்டிய திருக்கோயில் என்பதைத் தன் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார் திருமங்கையாழ்வார்.

கோவில் கோபுரம்

இத்திருக்கோயில் கோபுரம் ஐந்து அடுக்கு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் ஸ்தலபுராணம் பெண்ணுக்கு முன்னுரிமை தந்த பெருமாளின் பெருமையைக் குறிக்கிறது. மஹாலஷ்மி தாயார் திருநறையூரில் வகுளா தேவி நாச்சியாராக வளர்ந்துவந்ததால், மகரிஷி மேதவி விருப்பத்திற் கிணங்க நாச்சியார் கோயிலாக இவ்வூரின் பெயர் மாறியது என்பது புராண கதை.

மகரிஷி கையில் கிடைத்த சிலைகள்

மேதாவி மகரிஷி முக்காலத்தில் இவ்விடத்தில் தவமியற்றி வந்தார். வழக்கம் போல் ஓர் நாள் நதியில் புண்ணிய நீராடினார். அப்பொழுது, ஒருபுறம் சக்கரத்தாழ்வாரும் மறுபுறம் யோக நரசிம்மருமான சிலாரூபம் அவர் கைகளில் சிக்கியது. அந்தக் கணம் ஓர் அசரீரி இவ்விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து வருமாறு கூற அவ்வண்ணமே அவரும் செய்து வந்தார்.

மகரிஷியிடம் வளர்ந்த மகாலட்சுமி

இவ்விடத்தில் வந்து தங்கி வளர அன்னை மஹாலஷ்சுமி விரும்பினார். எனவே வகுள மரத்தடியில் அமர்ந்து தவமியற்றிக் கொண்டிருந்த இம்மகரிஷி முன் சிறுமியாகத் தோன்றித் தன்னை அவர் பொறுப்பில் வளர்த்து வருமாறு வேண்டினாள். உள்ளம் மகிழ்ந்த மகரிஷியும் அவ்வாறே வகுளா தேவி நாச்சியார் எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார். தாயாரும் இந்நிலவுலக வழக்கப்படி திருமணப் பருவ வயதை அடைந்தார்.

பெருமாளின் விருப்பம்

அந்த நேரத்தில் கருடன் மீதேறி தாயாரைத் தேடி வந்தார் பெருமாள். தனக்கு தாயாரை மணமுடித்துத் தருமாறு மகரிஷியிடம் வேண்டினார். அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்த மகரிஷியோ, மணமுடித்து தாயாரும் பெருமாளுமாக இங்கேயே தங்கி விட வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார்.

மகாலட்சுமியின் திருமணம்

அவை வகுளா தேவியின் சொல் கேட்டு நடக்க வேண்டும், அவளுக்கே அனைத்திலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மேலும் பல நிபந்தனைகளை விதித்தார் முனிவர். அவற்றை ஏற்றார் மகாவிஷ்ணு. கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தேரியது. தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோயில் எனப் பெயர் பெற்றது.



Leave a Comment